பாராளுமன்றத்திற்கு நுழையும் ஞானசார தேரர்; கட்சிக்குள் இழுபறி

பாராளுமன்றத்திற்கு நுழையும் ஞானசார தேரர்; கட்சிக்குள் இழுபறி-Gnanasara Thera-OPPP-National List-Nomination

- தன்னை நியமிக்குமாறு செயலாளர் ஏற்கனவே கடிதம்
- அத்துரலிய ரத்தன தேரரே நியமிக்கப்பட வேண்டும் என ஒரு சாரர் கோரிக்கை

'அபே ஜன பல பக்‌ஷய' கட்சியின் (OPPP) தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக, கலகொடஅத்தே ஞானசர தேரரை நியமிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்கட்சியின் ஊடகச் செயலாளர் எரந்த நவரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

ஞானசர தேரரை நியமிக்க, அக்கட்சியின் மத்திய செயற்குழு அனுமதி வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, இது தொடர்பான அறிவித்தலை கட்சியின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிப்பர் என அவர் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் 'அபே ஜன பல பக்ஷய' நாடு முழுவதுமாக, 67,758 வாக்குகளைப் பெற்றதற்கு அமைய, ஒரு தேசிய பட்டியல் ஆசனத்தைப் பெற்றுக் கொண்டுள்ளது.

இதேவேளை, அக்கட்சியின் செயலாளரான வேதினிகம விமலதிஸ்ஸ தேரர், குறித்த தேசியப் பட்டியல் பதவிக்கு தன்னை நியமிக்குமாறு, தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

நேற்றுமுன்தினம் (07) குறித்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளரான ஞானசார தேரர் உள்ளிட்டோரினால் இம்முறை சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுவுடன், சத்தியக்கடதாசி உரிய முறையில் சமர்ப்பிக்கப்படவில்லை எனத் தெரிவித்து, தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரினால், அவ்வேட்புமனு நிராகரிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அக்கட்சி சார்பில் அத்துரலிய ரத்தன தேரரை நியமிக்க வேண்டும் என ஒரு சாரர் தெரிவித்து வரும் நிலையில், இது தொடர்பான முடிவு இழுபறியிலேயே உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Sun, 08/09/2020 - 19:35


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை