Header Ads

'ஞானம் அறக்கட்டளை' நிதியம் ஒரு கோடி ரூபா அனுசரணை

பரீத் ஏ றகுமான்

ஓரு தசாப்பதத்துக்கு மேலாக அனுசரணையின்றி பல்வேறு அசௌகரியங்களை சந்தித்து வந்த இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்துக்கு, லைக்கா மொபைல்லின் ‘ஞானம் அறக்கட்டளை’ ஒரு கோடி ரூபா (10 மில்லியன் ரூபா) அனுசரணையை எதிர்வரும் இரண்டு வருடங்களுக்கு வழங்குவதற்கு முன்வந்துள்ளது.

இதன்படி, 19 வருடங்களுக்குப் பிறகு இலங்கை மெய்வல்லுநர் சம்மேளனத்துக்கு பிரதான அனுசரணையாளர் கிடைத்துள்ளது.

முன்னதாக 2001ஆம் ஆண்டு சுனில் குணவர்தன இலங்கை மெய்வல்லுநர் சம்மேளனத்தின் தலைவராக செயற்பட்ட காலத்தில் இலங்கை மெய்வல்லுநர் சம்மேளனத்துக்கு அனுசரணை வழங்கப்பட்டது.

இலங்கை மெய்வல்லுநர் சம்மேளனத்தின் எதிர்கால திட்டங்கள் மற்றும் அனுசரணை தொடர்பாக ஊடகங்களை தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு இலங்கை மெய்வல்லுநர் சம்மேளனத்தின் தலைவர் பாலித்த பெர்னாண்டோ தலைமையில் அண்மையில் (11) கொழும்பில் உள்ள ரமடா ஹோட்டலில் இடம்பெற்றது.

இதில் ஞானம் அறக்கட்டளையின் பென் ஹோல்டிங்ஸ் பணிப்பாளர் ரி. ஜெயசீலன், சுவர்னவாஹினி தொலைக்காட்சியின் நிறைவேற்று அதிகாரி சுதேவ ஹெட்டியாரச்சி, இலங்கை மெய்வல்லுநர் சம்மேளனத்தின் செயலாளர் ப்ரேமா பின்னவல, பொருளாளர் சான்த டி சில்வா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்த வைபவத்தில் கலந்துகொண்டு பேசிய மேஜர் ஜெனரல் பாலித்த பெர்னாண்டோ,

பல வருடங்களாக ஒழுங்கான அனுசரணை இருக்கவில்லை.

எமக்கு ஒவ்வொரு போட்டித் தொடர்களின் போது தான் அனுசரணை கிடைத்து வருகின்றது. இந்த அனுசரணை கிடைக்க பெரும் உதவிய ரூமி ஜஃபர் அவர்களை இந்த இடத்தில் ஞாபகப்படுத்தி அவர் செய்த இந்த உதவியால் மெய்வல்லுநர் போட்டிகள் சிறப்பாக இடம்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில், லைக்கா மொபைல்லின் ஞானம் அறக்கட்டளை எம்முடன் முதல்முறையாக கைகோர்த்து இலங்கையில் உள்ள மெய்வல்லுநர் வீரர்களின் எதிர்காலத்துக்காக உதவிக்கரம் நீட்டுவதற்கு முன்வந்துள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது.

இது எமது மெய்வல்லுநர் விளையாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும்.

இந்த அனுசரணை மூலம் கிடைக்கின்ற பணத்தை எமது வருடாந்த போட்டித் தொடர்கள், வீரர்களுக்கான ஆடை, சப்பாத்து உள்ளிட்ட உபகரணங்கள் கொள்வனவு செய்வதற்கு மட்டும் பயன்படுத்தப்படும். எந்தவொரு வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்கும் இந்தப் பணம் பயன்படுத்தப்படமாட்டது.

இதனிடையே, கடந்த வருடம் நேபாளத்தில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் எமது வீரர்கள் 27 தங்கப் பதக்கங்களை வென்று இலங்கைக்கு பெருமையை தேடிக் கொடுத்தனர்.

அந்த வீரர்கயை உள்ளடக்கியதாக தேசிய அணி நாட்டின் பல்வேறு பகுதிகளில் பயிற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

எமது அடுத்த இலக்கு 2021 டோக்கியோ ஒலிம்பிக்கில் எமது வீரர்களை பங்குபற்றச் செய்வதாகும்.

இதில் முப்பாய்ச்சல், ஈட்டி எறிதல் மற்றும் 3000 மீற்றர் தடைதாண்டல் ஆகிய போட்டிகளில் எமது வீரர்கள் ஒலிம்பிக் அடைவுமட்டத்தை நெருங்கியுள்ளார்கள்.

எமது வீரர்கள் சிறந்த உடற்தகுதியையும், மனோ தைரியத்தையும் கொண்டு தமது பயிற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர் என தெரிவித்தார்.

இந்த வைபவத்தில் கலந்துகொண்டு பேசிய ஞானம் அறக்கட்டளையின் பென் ஹோல்டிங்ஸ் பணிப்பாளர் ரி. ஜெயசீலன்,

இலங்கையின் மெய்வல்லுநர் விளையாட்டை மேம்படுத்துவதற்கு கிடைத்த வாய்ப்பை பெருமையாகக் கருகிறோம். ஞானம் அறக்கட்டளையானது ஒரு தொண்டு நிறுவனமாகும்.

புறக்கணிக்கப்பட்டவர்களுக்கும், மறக்கப்பட்டவர்களுக்கும் உதவுவதே எமது பிரதான நோக்கமாகும். இலங்கையில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு உதவ கிடைத்த இந்த வாய்ப்பை நாங்கள் பெருமையாக கருதுகின்றோம்.

வர்த்தக நலன்களுக்காக இயங்குகின்ற ஏனைய அறக்கட்டளைகளைப் போல் அல்லாமல் சமூக நலன் மற்றும் சமூக அபிவிருத்திகளை குறிக்கோளாகக் கொண்டு தான் எமது அறக்கட்டளை செயற்பட்டு வருகின்றது என அவர் தெரிவித்தார்.

கொவிட் – 19 வைரஸ் காரணமாக இவ்வருடம் நடைபெறவிருந்த பெரும்பாலான உள்ளூர் மற்றும் சர்வதேசப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டது.

இதனிடையே, சுகாதார அமைச்சின் வழிகாட்டலுடன் தேசிய மெய்வல்லுநர் அணிக்கு வீரர்களை தேர்வு செய்வதற்கான தகுதிகாண் போட்டிகள் எதிர்வரும் அக்டோபர் 23ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இதனையடுத்து, தெரிவு செய்யப்பட்ட வீரர்களுக்காக மாத்திரம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 5ஆம், 6ஆம் திகதிகளில் தேசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் தொடர் நடைபெறவுள்ளது.

அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஆசிய இளையோர் விளையாட்டு விழா மற்றும் உலக கனிஷ்ட மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் தொடர்களை இலக்காகக் கொண்டு இவ்வருட நடுப்பகுதியில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த தகுதிகாண் போட்டிகள், சாதாரண தரப் பரீட்சைக்கான திகதிகள் அறிவிக்கப்பட்ட பிறகு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sat, 08/15/2020 - 06:00


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.