சென்னை சுபர் கிங்ஸ் அணியில் 10 பேருக்கு கொரோனா தொற்று

சென்னை சுபர் கிங்ஸ் அணியினைச் சேர்ந்த 10பேருக்கு கொவிட்-19என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இந்த ஆண்டின் மார்ச் மாதம் நடைபெறவிருந்து ஒத்திவைக்கப்பட்ட 13ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர், செப்டம்பர் மாதம் 19ஆம் திகதி தொடக்கம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த ஐ.பி.எல். தொடரில் பங்கேற்கும் எட்டு அணிகளும், ஐக்கிய அரபு இராச்சியம் பயணமாகி சுயதனிமைப்படுத்தல் முகாம்களில் பங்கெடுக்கும் நிலையிலையே, அந்த எட்டு அணிகளில் ஒன்றான சென்னை சுபர் கிங்ஸ் அணியினைச் சேர்ந்தவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டிருக்கின்றது.

சென்னை சுபர் கிங்ஸ் அணி ஐ.பி.எல். தொடருக்கான பயிற்சிகளை அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்க இருந்த நேரத்தில், 10பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கும் விடயம் அவ்வணிக்கு பாரிய பின்னடைவுகளில் ஒன்றாகவும் மாறியிருக்கின்றது. சென்னை சுபர் கிங்ஸ் அணி நிர்வாகம் வைரஸ் தொற்றுக்கு உள்ளான வீரர்கள், அணி ஊழியர்கள் தொடர்பான விபரங்கள் எதனையும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.

இந்திய ஊடகங்கள் சில வேகப்பந்துவீச்சாளரான டீபக் சாஹர் கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருக்கும் சென்னை சுபர் கிங்ஸ் அணி வீரர்களில் ஒருவராக உள்ளார் என செய்திகளை வெளியிட்டிருக்கின்றன. வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதால் அடுத்த வாரம் முதல் பயிற்சிகளை ஆரம்பிக்கவிருந்த சென்னை சுபர் கிங்ஸ் அணி இன்னும் மேலதிகமாக ஒரு வாரத்திற்கு தங்களது வீரர்களையும், அணி ஊழியர்களையும் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தவுள்ளது. சென்னை சுபர் கிங்ஸ் அணியின் வீரர்களும், ஊழியர்களும் ஐக்கிய அரபு இராச்சியம் சென்று கொவிட்-19 வைரஸ் தொற்று தொடர்பான மூன்று கட்டாய பரிசோதனைகளுக்கு முகம் கொடுத்த பின்னர், நான்காவது பரிசோதனையின் போதே அங்கே வீரர்களுக்கும், அணி ஊழியர்களுக்கும் கொவிட்-19 தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Mon, 08/31/2020 - 15:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை