'நல்லாட்சி அரசு குறைபாடுகள் நிறைந்ததாகக் காணப்பட்டது'

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தமிழ் அலைவரிசையான நேத்திரா தொலைக்காட்சியில் கடந்த ஞாயிறு ( 12.-07.-2020 ) இரவு 7.30 முதல் 9 மணிவரை ஒளிபரப்பான 'சவால்'எனும் புதிய அரசியல் நிகழ்ச்சியில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம். ஏ. சுமந்திரன், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் அங்கத்துவ கட்சியான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னனியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன், சமகி ஜன பலவேகய எனும் ஐக்கிய மக்கள் சக்தியின் அங்கத்துவ கட்சியான தமிழ் முற்போக்கு கூட்டணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் மற்றும் ஈழமக்கள் ஜனநாயக கட்சி முக்கியஸ்தரும் வடமாகாண சபை முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான எஸ்.தவராசா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியை சிரேஷ்ட ஊடகவியலாளர் ஜெயரஞ்சன் யோகராஜ் தொகுத்து வழங்கினார்.

முன்னாள் எம்.பியான சுமந்திரன் இந்நிகழ்ச்சியில் கருத்துத் தெரிவிக்ைகயில் கடந்த கால நல்லாட்சி அரசாங்கம் அந்த பெயரைக் கூட உச்சரிக்க முடியாத வகையில் பல குறைகளை கொண்டிருந்ததாக தெரிவித்தார்.

தமது கூட்டமைப்பிற்கு கடந்த ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் பலமிருந்த போதிலும் அதனை தமிழ் மக்களின் நன்மைக்காக முழுமையாக பயன்படுத்த முடியாமல் போனது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியதனாலேயே தமது புதிய கூட்டணி உருப்பெற்றதாக  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

தமது கூட்டணி மலையக மக்களுக்கு கூடுதல் சேவையை செய்துள்ளதாக  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் குறிப்பிட்டார்.

இதேவேளை தமது கட்சிக்கு கூடுதல் ஆசனங்கள் கிடைத்திருந்தால் தமிழ் மக்களுக்கு மேலும் பல சேவைகளை செய்து அவர்களது பிரச்சினைகளை தீர்க்கும் வல்லமை இருந்திருக்கும் என்று   வட மாகாண சபை முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் எஸ்.தவராசா தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியானது பொதுமக்களின் எதிர்பார்ப்புக்கமைய, அவர்களது அபிலாஷைகளையும் கேள்விகளையும் சந்தேகங்களையும் தீர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போதைக்கு இந்நிகழ்ச்சி ஒரு பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சியாக அமைந்திருந்தாலும் எதிர்வரும் காலங்களில் பொதுமக்களும் தொலைபேசி மூலம் இணைந்து கேள்வி கேட்கக் கூடிய வகையில் நேரடி நிகழ்ச்சியாக அமையும்.

Thu, 07/16/2020 - 07:52


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை