பென் ஸ்டோக்ஸின் அசத்தலுடன் டெஸ்ட் தொடரை சமன் செய்த இங்கிலாந்து

மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 113 ஓட்டங்களால் வெற்றி பெற்று 1-1 என சமநிலை செய்துள்ளது.

முதலாவது போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்று 1-0 என முன்னிலை பெற்றிருக்க, இங்கிலாந்து அணியினர் தொடரில் முதல் வெற்றியினை எதிர்பார்த்து அணித்தலைவர் ஜோ ரூட்டுடன் ஸ்டுவர்ட் ப்ரோட், சேம் கர்ரன் மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகிய வீரர்களை உள்வாங்கியிருந்தனர். முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணியினர் 9 விக்கெட் இழப்புக்கு 469 ஓட்டங்கள் பெற்ற நிலையில் தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை இடைநிறுத்தியது.

இங்கிலாந்து அணி சார்பில், தனது 10 ஆவது டெஸ்ட் சதத்துடன் பென் ஸ்டோக்ஸ் 176 ஓட்டங்கள் பெற்றார். மறுமுனையில், தனது இரண்டாவது டெஸ்ட் சதத்துடன் டொம் சிப்லி 120 ஓட்டங்களை எடுத்தார். இந்த இரண்டு வீரர்களும் நான்காவது விக்கெட்டுக்காக 260 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சு சார்பில் சுழல் பந்துவீச்சாளரான ரொஸ்டன் சேஸ் 5 விக்கெட்டுக்களைச் சாய்க்க கேமர் ரோச் 2 விக்கெட்டுக்களை சுருட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பின்னர், தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த மேற்கிந்திய தீவுகள் அணியினர் 287 ஓட்டங்களை எடுத்தனர். மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் கிரைக் ப்ராத்வைட் 75 ஓட்டங்களைப் பதிவு செய்தார். அதேவேளை, ஷாமர் புரூக்ஸ் 68 ஓட்டங்களையும், ரொஸ்டன் சேஸ் 51 ஓட்டங்களையும் பெற்றனர்.

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் ஸ்டுவர்ட் ப்ரோட் மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகிய வீரர்கள் தலா 3 விக்கெட்டுக்கள் கைப்பற்ற, சேம் கரன் 2 விக்கெட்டுக்களைச் சாய்த்தார்.

182 ஓட்டங்கள் முன்னிலை பெற்ற இங்கிலாந்து அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 129 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து தமது ஆட்டத்தினை இடைநிறுத்தியது. ஆரம்பவீரராக களமிறங்கிய பென் ஸ்டோக்ஸ் ஆட்டமிழக்காமல் 57 பந்துகளுக்கு 78 ஓட்டங்கள் பெற்று இம்முறையும் சிறந்த துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்தினார். மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சு சார்பில் கேமர் ரோச் 2 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வெற்றி இலக்கான 312 ஓட்டங்களை பெற இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த, மேற்கிந்திய தீவுகள் அணி 198 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து போட்டியில் தோல்வியடைந்தது. ஷாமர் புரூக்ஸ் 62 ஓட்டங்களையும் ஜெர்மைன் பிளாக்வூட் 55 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சு சார்பில் ஸ்டுவார்ட் ப்ரோட் 3 விக்கெட்டுக்களைச் சாய்த்தும், கிறிஸ் வோக்ஸ், டொமினிக் பெஸ் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்தும் தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்தனர்.

ஆட்டநாயகனாக பென் ஸ்டோக்ஸ் தெரிவாகினார். இப்போட்டியின் வெற்றி மூலம் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக இங்கிலாந்து அணி 40 புள்ளிகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த டெஸ்ட் தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டி எதிர்வரும் வெள்ளிக்கிழமை (24) இதே மன்செஸ்டர் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Wed, 07/22/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை