மேல் மாகாணத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகளில் 1,563 பேர் கைது

- முகக் கவசம் அணியாத 2,093 பேருக்கு எச்சரிக்கை

- சமூக இடைவெளி பேணாத 968 பேருக்கு எச்சரிக்கை

மேல் மாகாணத்தில் நேற்று (18) காலை 6.00 மணி முதல்,  இன்று (19) அதிகாலை 5.00 மணி வரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின்போது பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 1,563 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள், சட்டவிரோத மதுபானம், கோடா வைத்திருந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இச்சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்களில் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட 771 பேரும், ஏனைய குற்றங்களை இழைத்த குற்றச்சாட்டில் 41 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் 349 பேரும், கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் 158 பேரும், ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 14 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோத மதுபானம் வைத்திருந்த குற்றச்சாட்டில் 206 பேரும், கோடா வைத்திருந்த குற்றச்சாட்டில் 24 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சுற்றிவளைப்புகளின்போது சட்டவிரோத மதுபானம் 1,296 போத்தல்களும்,  கோடா 63 பரல்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்தோடு, ஹெரோயின் 208 கிராம் 776 மில்லிகிராமும், கஞ்சா 801 கிராம் 764 மில்லிகிராமும், ஐஸ் போதைப்பொருள் 10 கிராம் 880 மில்லிகிராமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, முகக் கவசம் அணியாமை தொடர்பில் 2,093 பேர் எச்சரிக்கப்பட்டுள்ளதோடு, சமூக இடைவெளியை பேணாமை தொடர்பில் 968 பேர் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

Sun, 07/19/2020 - 12:57


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை