தேர்தல் நடத்துவது தொடர்பில் சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல் பரிந்துரைகள் வெளியீடு

தேர்தல் ஆணைக்குழுவிடம் கையளிப்பு

பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பில் பின்பற்றவேண்டிய சுகாதார பரிந்துரைகள் உள்ளடக்கப்பட்ட வழிகாட்டல்கள் நேற்று சுகாதார அமைச்சினால் தேர்தல் ஆணைக்குழுவுக்கு கையளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் சூழ்நிலையில் தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அவசியமான  சுகாதார பரிந்துரைகள் உள்ளடங்கிய வழிகாட்டல்களை சுகாதார அமைச்சு தயாரித்திருந்தது.

அந்த பரிந்துரைகளடங்கிய வழிகாட்டல் கோவை நேற்று தேர்தல் ஆணைக்குழுவுக்கு கையளிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

சுகாதார அமைச்சின் பரிந்துரைகளுக்கமைய தபால் மூல வாக்களிப்பு நடத்தும் விதம், அதற்காக இணைத்துக்கொள்ள வேண்டிய அரசாங்க ஊழியர்கள், தேர்தல் கூட்டங்கள் நடத்த வேண்டிய முறைமை, வீடு வீடாகச் சென்று பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முறை, வாக்களிப்பு மற்றும் வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் ஆகியன தொடர்பான பரிந்துரைகள் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

நேற்றைய தினம் தேர்தல் ஆணைக்குழு மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அணில் ஜாசிங்க தலைமையிலான சுகாதாரத்துறை அதிகாரிகள் குழுவுக்குமிடையில் மேற்படி விடயம் தொடர்பில் முக்கிய பேச்சுவார்த்தை ஒன்றும் நடைபெற்றுள்ளது.

அதையடுத்து பரிந்துரைகளடங்கிய வழிகாட்டுதல் கோவை கையளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

மேற்படி பரிந்துரைகள் அடங்கிய வழிகாட்டுதல்கள் தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் சுகாதார பாதுகாப்புக்கிணங்க தேர்தலை நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ஆணைக்குழு விரைவாக முன்னெடுக்குமென்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Thu, 06/04/2020 - 09:43


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை