நயினாதீவு ஆலய வாசலில் பாதணிகளுடன் பொலிஸார்

இந்து, பொது அமைப்புக்கள் கண்டனம்

நயீனாதீவு ஆலயத்தின் கோபுர வாசலில் பொலிஸ் மற்றும் கடற்படையினர் பாதணிகளுடன் உட்சென்றமை தொடர்பாக பல்வேறு இந்து அமைப்புக்களும், பொதுமக்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.  வரலாற்றுச் சிறப்புமிக்க நயீனாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் கொடியேற்ற திருவிழா நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதில் 70 பேருக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்ட நிலையில் அதிகளவான பொதுமக்கள் வருகை தந்திருந்தனர்.​இதன்போது ஆலயத்தின் பாதுகாப்பு கடமைகளில் பொலிஸ் மற்றும் கடற்படையினர் ஈடுபடுத்தப்பட்டனர். இவ்வாறு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உயரதிகாரிகளும், கடற்படையினரும் ஆலயத்தின் பிரதான கோபுர வாசலில் சப்பாத்துக்களுடன் உட் சென்று வந்துள்ளனர்.இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள நிலையில் பல்வேறு தரப்பினரும், இந்து அமைப்புக்களும், பொலிஸ் மற்றும் கடற்படையினரின் செயற்பாடுகளுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக இது தொடர்பாக சிவசேனை அமைப்பும் தனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அவ் அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் கூறுகையில்,

மதவழிபாட்டு தலங்களில் அவற்றின் புனித தன்மை பாதுகாக்கவும், மதிக்கப்படவும் வேண்டும். அந்தவகையில் நயீனாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் பொலிஸார் மற்றும் கடற்படையினர் ஆலயத்தின் புனித தன்மையை மதிக்காது கோபுர வாசலில் சப்பாத்துக்களுடன் நடந்து சென்றமை வன்மையாக கண்டிக்கத்தக்க விடயமாகும்.

அதனை யாராக இருந்தாலும் பின்பற்ற வேண்டும். அது பௌத்த விகாரையாக இருந்தாலும் சரி, இந்து ஆலயங்களாக இருந்தாலும் சரி, மசூதிகளாக இருந்தாலும் சரி அவற்றின் புனித தன்மையை பாதுகாக்க வேண்டும்.

இது தொடர்பாக உயரதிகாரிகள் நடவடிக்கை எடுத்து எதிர்காலத்தில் மதவழிபாட்டு தலங்களின் புனித தன்மை பாதுகாக்கப்பட வேண்டியதனை உறுதிப்படுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

 

ரி.விரூஷன்

Mon, 06/22/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை