பொதுத்தேர்தல் திகதி திங்களன்று உத்தியோகபூர்வமாக அறிவிப்பு

வேட்பாளர் இலக்கம் வர்த்தமானி அறிவித்தல் அன்றைய தினமே வெளியீடு

பாராளுமன்றத் தேர்தலை நடத்தும் திகதி எதிர்வரும் 08 ஆம் திகதி திங்கட்கிழமை அறிவிக்கப்படுமெனவும் வேட்பாளர்களுக்கான உரிய இலக்கங்களும் அன்றைய தினமே வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட இருப்பதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய நேற்று தெரிவித்தார்.

ஆணைக்குழுவின் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த தேர்தலை நடத்தும் பொருட்டு சுகாதார தரப்பு தயாரித்துள்ள தேர்தலுக்கான சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்கள் அறிக்கை நேற்று காலையிலேயே ஆணைக்குழுவுக்கு கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

தேர்தலுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை நிராகரித்து வழங்கப்பட்ட தீர்ப்பையடுத்து தேர்தலை விரைவில் நடத்துவது குறித்து ஆணைக்குழு தீவிரமாக ஆராய்ந்து வருவதாகவும், தேர்தல் நடத்தக் கூடிய திகதி தொடர்பில் திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவிக்க முடியுமெனவும் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டார்.

பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பில் ஆணைக்குழு முக்கியமான இரண்டு தடைகளை எதிர்கொள்ள நேரிட்டதாகவும் அதில் முதலாவது தடையானது தேர்தலுக்கு எதிராக உயர் நீதிமன்ற விசாரணை நேற்று முன்தினம் முடிவுக்கு வந்திருக்கின்றது.

இரண்டாவது சவால் கொரோனா தொற்று பரவல் தொடர்வதாகும். இந்த இரண்டாவது சவாலை எதிர்கொண்டு பயணிக்க வேண்டிய நிலை எனக்கு ஏற்பட்டிருக்கின்றது. இதனை கட்டுப்படுத்திக் கொண்டே தேர்தலுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது.

இதன் பொருட்டு சுகாதாரத்துறையினர் தயாரித்து வழங்கி இருக்கும் வழிகாட்டல்களை பின்பற்றுவதன் அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்த வழிகாட்டல் அறிக்கையில் பல்வேறு விடயங்களும் சுட்டிக்காட்டப்பட்டு சிபாரிசுகளும் அறிவுரைகளும் வழங்கப்பட்டுள்ளன.

இந்தத் தேர்தலில் முக்கியமான விடயமென மூன்று விடயங்களை நாம் உறுதியாக பேணவேண்டியுள்ளது. சமூக இடைவெளியை உரிய முறையில் பேணுவது கட்டாயமாகும். சகலரும் முகக் கவசம் அணிவது, அடிக்கடி கைகளை கழுவிச் சுத்தமாக வைத்திருப்பது என்பனவையாகும்.

இந்த வழிகாட்டல் அறிக்கை நாட்டு மக்களுக்கும் அதிகாரிகளுக்கும் திங்கட்கிழமை முதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் தொடராக அது குறித்து தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கவும் எதிர்பார்ப்பதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார். இந்தத் தேர்தலின் போது புதிய நடைமுறையொன்றும் பின்பற்றப்படவுள்ளது. சகல வாக்களிப்பு நிலையங்களிலும் சுகாதார அதிகாரிகள் கடமையிலீடுபடுத்தப்படவுள்ளனர். இதனை கண்காணிப்பதற்கு பல வாக்களிப்பு நிலையங்களை இணைத்ததாக சுகாதாரத்துறை மேலதிகாரிகளைக் கொண்ட நடமாடும் சேவையும் முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்தத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பிக்கும் காலத்தையும் நீடித்துள்ளோம். எதிர்வரும் 08 ஆம் திகதிக்கு முன்னர் இதற்கான விண்ணப்பங்களை அருகிலுள்ள பிரதேச அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும். சுகாதாரத்துறையினர் தேர்தலில் சேவையில் ஈடுபடுத்தப்படவிருப்பதால் அவர்களுக்கும் தபால் மூலம் வாக்களிப்பதற்கு வாய்ப்பளிக்கும் முகமாகவே இந்த கால நீடிப்பு வழங்கப்படுகிறது. இந்த விண்ணப்பங்களை 09ஆம் திகதி பிரதேச அலுவலகங்களில் ஒப்படைப்பதற்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தத் தேர்தலில் முன்னைய தேர்தலை போலன்றி முக்கியமான விடயங்களை கவனத்தில்கொள்ள வேண்டியுள்ளது. அதிகாரிகளும் மக்களும் கட்டாயமாக சுகாதார வழிகாட்டல்களை பின்பற்ற வேண்டிய அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது. கூடுதலாக சமூக இடைவெளியை பேணவேண்டும். நெருக்கமாக கூடுவதையும் பழகுவதையும் தவிர்க்கவேண்டும்.

தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் நடத்தக் கூடாது. அவசியமெனக் கருதப்பட்டால், தேர்தல் அலுவலகங்களில் வேட்பாளர்கள், 30க்குள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஆதரவாளர்களை கூட்டி ஆலோசனை வழங்கலாம்.

தேர்தலை நடத்த தீர்மானிக்கப்பட்டதன் காரணமாக கொரோனா தொற்று முடிவுக்கு வந்து விட்டதாக எவரும் கருதக் கூடாது. இந்தத் தொற்று அடுத்த 2021 இலும் அதற்கப்பாலும் நீடிக்கவே செய்யுமென சுகாதாரத் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இதற்கு முகம்கொடுத்தே நாம் பயணிக்க வேண்டியுள்ளது. அடுத்த வாரத்தில் பணிகள் துரிதப்படுத்தப்படும். இதற்கமைய தேர்தல் நடத்தப்படும் சரியான திகதி திங்கட்கிழமை அறிவிக்கப்படுமெனவும் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்

எம். ஏ. எம். நிலாம்

Thu, 06/04/2020 - 09:16


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை