கிழக்கில் மூடப்பட்ட நிலையில் 13 சிறுவர் பராமரிப்பு நிலையங்கள்

மாகாண ஆணையாளர்றிஸ்வான் றிபாத் தகவல்

'கொரோனா நெருக்கடியினால்  கிழக்கு மாகாணத்தில் இயங்கி வந்த 52 சிறுவர் இல்லங்களில்13 இல்லங்கள் இயங்கமுடியாமல் மூடப்பட்டுள்ளன. 1350 சிறுவர்கள் இருந்தஇடத்தில் இன்று 400 பேரே உள்ளனர்' என்று சிறுவர் நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்புத் திணைக்கள கிழக்கு மாகாண ஆணையாளர் திருமதி றிஸ்வான் றிபாத் தெரிவித்தார்.

கொரோனா நெருக்கடி நிலையில் கிழக்கு மாகாணத்திலுள்ள சிறுவர் இல்லங்களின் நிலைவரம் தொடர்பாக வினவிய போது பதிலளித்த அவர் “நாங்கள் சிறுவர் இல்லங்கள் என அவற்றை அழைப்பதில்லை. மாறாக சிறுவர் அபிவிருத்தி நிலையங்கள் என அழைப்பது வழமை.

கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்தில் 13இல்லங்களும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 32இல்லங்களும், அம்பாறை மாவட்டத்தில் 07இல்லங்களுமாக மொத்தம் 52நிலையங்கள் இயங்கி வந்தன. அவற்றுள் 13இல்லங்கள் தற்சமயம் இயங்கவில்லை.

திருகோணமலை மாவட்டத்தில் 07இல்லங்களும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 03இல்லங்களும், அம்பாறை மாவட்டத்தில் 03இல்லங்களுமாக மொத்தம் 13சிறுவர் இல்லங்கள் இயங்காமலுள்ளன. அதாவது தற்காலிகமாக மூடப்பட்டிருக்கின்றன.

இதனால் 1350சிறுவர்களிருந்த இடத்தில் தற்போது ஆக 400 சிறுவர்களே உள்ளனர். ஏனைய 950 பேர் கொரோனா அச்சம் மற்றும் பாடசாலை விடுமுறை காரணமாக வீடு சென்று விட்டனர்.

இன்று இல்லத்திலுள்ள சிறுவர்களை விட விடுமுறையில் வீடு சென்ற இல்லச் சிறுவர்கள் வீடுகளில் கூடுதலாக இன்னல்படுகிறார்கள். உணவு கல்விக்கு கஷ்டப்படுகிறார்கள். எனவே அவர்கள் முடியுமான வரை இல்லத்திற்கு வர முயற்சிக்க வேண்டும்.அப்போதுதான் ஆரோக்கியமான உணவு முதல் சீரான கற்றல் வரை பெற்றுக் கொள்ள முடியும்.

வீட்டிலுள்ள சுகாதார நடைமுறையை விட இல்லங்களில் சீரான, செம்மையான சுகாதார நடைமுறை பேணப்படுகின்றது.

அந்த இல்லங்களுக்கு சுகாதார பாவனைப் பொருட்களை யுஎஸ்.எய்ட் நிறுவனம் வழங்கி வருகிறது.

நாம் அரச உதவியாக ஒரு இல்லத்திற்கு ஒரு வருடத்திற்கு 1இலட்சத்து 15ஆயிரம் ருபாவை வழங்கி வருகிறோம். இது இல்ல கட்டட திருத்த வேலைக்கும்  ஏனைய பொருட் கொள்வனவிற்கும்  செலவிடப்படக் கூடியது.

இதனை விட ஒவ்வொரு இல்லத்திற்கும் தாபரிப்பு உதவிப்பணமாக சிறுவர் ஒருவருக்கு மாதாந்தம் 500 ரூபாவை வழங்கி வருகிறோம்.

இல்லங்களுக்கு அரசா ங்கத்தின் உதவிகளை விட நன்கொடையாளர்களின் உதவிகளும் சுமாராக கிடைத்து வந்துள்ளன. பரோபகாரிகள், நன்கொடையாளர்கள் குறித்த இல்லங்களுக்கு சுமுகமாக வாரி வழங்கி வந்தனர். ஆனால் இன்று கொரோனா தொற்றுப் பரம்பலினால் அவர்கள் கூட பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் அவர்களால் உதவ முடியாத துரதிர்ஷ்டநிலை தோன்றியுள்ளது. இந்நிலை இல்லங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் யுனிசெவ் உதவி கிடைக்கப் பெற்றது. அதனால் தாய்,தந்தையர் இருவரையும் இழந்த பிள்ளையொன்றுக்கு 1இலட்சருபா வழங்கப்படவுள்ளது. சிறுவர்கள்தான் நாட்டின் எதிர்காலம். அவர்கள் காப்பாற்றப்பட வேண்டியவர்கள். இன்றைய சூழலில் இத்தகைய உதவிகள் கிடைப்பினும் உலருணவு தேவையாகின்றது. அதனைச் செய்ய பரோபகாரிகள், நிறுவனங்கள் முன்வர வேண்டும்”என்றார்.

காரைதீவு குறூப் நிருபர்

Fri, 06/05/2020 - 14:08


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை