சீனா மீதான அமெரிக்காவின் குற்றச்சாட்டு வெறும் ஊகமே

உலக சுகாதார ஸ்தாபனம் சாடல்

சீன ஆய்வகங்களில் இருந்து கொரோனா வைரஸ் பரவியமைக்கான ஆதாரங்கள் உள்ளன எனும் அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவின் கருத்துக்கள்  விஞ்ஞான பூர்வமான ஆதாரங்களுடன் உறுதிப்படுத்தபட வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனம்  வலியுறுத்தியுள்ளது.

2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வுஹான் நகரில் இருந்து பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ்  உலகில் ஏறக்குறைய 200 நாடுகளுக்கு பரவியுள்ளது.

குறித்த வைரஸ் பரவலின் காரணமாக கடந்த 4 மாதங்களுக்கு மேலாக இரண்டரை லட்சத்துக்கும் மேலானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் சீனாவின் தலையீட்டுடன்  வுஹான் நகர ஆய்வு கூடங்களில் இருந்து வைரஸ் பரவியிருக்க கூடுமென குற்றசாட்டுகள் எழுந்துள்ளன.

குறிப்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறித்த சந்தேகத்தை எழுப்பியுள்ள அதேவேளை இது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் பணித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பாக அண்மையில் கருத்து தெரிவித்திருந்த அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ  சீனாவின் ஆய்வு கூடங்களில் இருந்து கொரோனா வைரஸ் பரவியதை உறுதி செய்வதற்கான ஆதாரங்கள் தம்மிடம் உள்ளன என தெரிவித்திருந்தார்.

எனினும்  குறித்த வைரஸ் மனிதர்களால் பரப்பப்பட்டவை அல்ல எனும் அமெரிக்க புலனாய்வு பிரிவின் முடிவினை தான் மறுக்கவில்லை எனவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் மைக் பொம்பியோவின் பேச்சு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள உலக சுகாதார ஸ்தாபனம்  இக்கருத்து ஓர் ஊகம் எனவும் இக்கருத்தானது விஞ்ஞான பூர்வமான ஆதாரங்களுடன் உறுதிப்படுத்தபட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் அவசரகால நிலைகள் தொடர்பிலான உயர்நிலை உத்தியோகத்தர் மருத்துவர் மைக் ராயன் இது தொடர்பில் தெரிவிக்கையில்  குறித்த வைரஸ் சீனாவின் ஆய்வுக்கூடங்களில் இருந்து பரவியமை தொடர்பில் அமெரிக்க அரசாங்கத்திடம் இருந்து எவ்விதமான ஆதாரங்களும் எமக்கு கிடைக்கப்பெறவில்லை. ஆகவே எமது பார்வையின்படி இக்கருத்தானது ஊகம் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை மைக் பொம்பியோவின் குறித்த கருத்தானது முட்டாள்தனமான ஒன்று என சீன அரசாங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Wed, 05/06/2020 - 09:17


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை