அம்பாறை மாவட்டத்தில் சீரற்ற காலநிலையால் மீனவத் தொழில் பாதிப்பு

சீரற்ற காலநிலை காரணமாக கடந்த சில தினங்களாக அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேச மக்கள் பலர் தமது வாழ்வாதாரத் தொழிலில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடற்பரப்பில் வீசி வரும் பலத்த காற்றின் காரணமாக இம்மாவட்டத்தின் மீனவர்கள் தமது தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கடற்றொழிலை மாத்திரம் நம்பி தமது வாழ்வாதாரத்தினைக் நகர்த்திச் செல்லும் மீனவர்கள் கடந்த சில தினங்களாக தொழில் வாய்ப்பற்று காணப்படுகின்றனர். காற்றுடன் கூடிய காலநிலை காரணமாக இவர்களது தொழில்வாய்ப்பு வெகுவாக பாதிப்படைந்துள்ளது.

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்படும் வலுவான தாழமுக்கத்தினால் அது சூறாவளியாக வலுவடைந்துள்ளதனால் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

கடற்பிராந்தியத்தில் பலமாக வீசும் காற்றின் காரணமாக அலைகளின் வேகமானது வீரியத்துடன் எழுவதை அவதானிக்க முடிகின்றது. அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, திருக்கோவில், பொத்துவில், நிந்தவூர், சாய்ந்தமருது, காரைதீவு, கல்முனை மற்றும் மருதமுனை பிரதேசங்களில் உள்ள மீனவர்கள் தமது கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதனை அவதானிக்க முடிந்தது.

கடற்பரப்பிலும், கடற்கரையினை அண்டிய பகுதிகளிலும் வீசுகின்ற பலத்த காற்றின் காரணமாக கரையோரப் பகுதிகளில் தரித்து வைக்கப்பட்டிருந்த சில வள்ளங்களும், படகுகளும் அலையினால் அள்ளுண்டு செல்லப்பட்டதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை அம்பாறை மாவட்டத்தின் கடற்கரைப் பிரதேசத்தில் அலைகளின் வேகத்தினால் கடலரிப்பு நிகழ்வு வருவதோடு, கடல் நீரானது சில பிரதேசங்களில் நீண்ட தூரத்திற்கப்பால் கரைக்குச் சென்றதனால் மீனவர்கள் தமது வள்ளங்கள் மற்றும் படகுகளை நீண்ட தூரத்திற்கப்பால் இழுத்து கரையொதுக்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அம்பாறை மாவட்டத்தின் கடற்கரையோரப் பகுதிகளில் மாலை வேளைகளில் வீசுகின்ற பலத்த காற்றின் காரணமாக சில பிரதேசங்களில் கடல் அலை சுமார் பத்தடிக்கு மேல் உயர்வதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

திருக்கோவில் தினகரன்,  அட்டாளைச்சேனை தினகரன் நிருபர்கள்

Tue, 05/19/2020 - 10:36


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை