ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் உதவி திட்டமிடல் பணிப்பாளருக்கு விளக்கமறியல்

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் உதவி திட்டமிடல் பணிப்பாளருக்கு விளக்கமறியல்-Alayadivembu DS and Assistang Planning Director Remanded Till June 10

3 வீதிகளுக்கும் தலா ஒவ்வொரு இலட்சம் இலஞ்சம்

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளரும், ஆலையடிவேம்பு பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஆகியோருக்கு எதிர்வரும் ஜூன் 10 ஆம் திகதிவரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் வியாழக்கிழமை (28) இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட குறித்த இருவரையும் நேற்று முன்தினம (28) இரவு  அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியும் மேலதிக நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான எம்.எச்.எம்.ஹம்ஸா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது இருவரையும் 14 நாட்கள் மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

அத்துடன், சந்தேகநபர்களை கொழும்பு பிரதான நீதிமன்றத்தில் அன்றையதினம் (ஜூன் 10) ஆஜர்படுத்துமாறும் மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு நீதவான் உத்தரவிட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது

அரசினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் 'சபிரிகம' நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ அம்பாறை மாவட்டம், ஆலையடிவேம்பு பிரதேசத்தில் மூன்று வீதிகளை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் ஒன்றினை அப்பிரதேச ஒப்பந்தக்காரர் ஒருவர் பெற்றுள்ளார்.

இவ்வீதி நிர்மாணத்தை அமுலாக்கும் பொறுப்பு ஆலையடிவேம்பு பிரதேச செயலாளருக்கு உரியது எனும் நிலையில், மேற்படி ஒப்பந்தக்காரர் பெற்றுள்ள ஒவ்வொரு வீதிக்கும் தலா ஒரு இலட்சம் வீதம் மூன்று இலட்சம் ரூபா பணத்தை சந்தேகநபர்கள் இலஞ்சமாக கோரியுள்ளனர். கொந்தராத்துக்காரர் பணத்தை வழங்காததால் அப்பணிகளை ஆரம்பிக்க முடியாமல் போயுள்ளது.

இதனையடுத்து கொழும்பு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு கொந்தராத்துகாரர் தெரியப்படுத்தியுள்ளார். நேற்று முன்தினம் வியாழக்கிழமை (28) பிற்பகல் கொந்தராத்துகாரரிடம் இலஞ்ச ஊழல் அதிகாரிகள் மூன்று இலட்சம் ரூபா பணத்தை கொடுத்து பிரதேச செயலாளரிடம் கொடுக்குமாறு கூறியுள்ளனர்.

கொந்தராத்துகாரர் பிரதேச செயலாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பணத்தை தான் கொண்டுவருவதாக கூறியுள்ளார். அதற்கு பிரதேச செயலாளர் பணத்தை உதவி திட்டமிடல் பணிப்பாளரிடம் வழங்குமாறு கூறியுள்ளார். அதற்கு அமைய கொந்தராத்துகாரர்  பணத்தை உதவி திட்டமிடல் பணிப்பாளரிடம் கொடுத்துள்ளார்.

பணத்தை கொடுக்கும் போது சாதாரணமான முறையில் உடையணிந்து கூடவே சென்ற இலஞ்ச ஊழல் ஆணைக்குழ அதிகாரிகள், பணத்தை உதவி திட்டமிடல் பணிப்பாளர் பெற்றதும் இலஞ்ச ஊழல் அதிகாரிகள் உதவி திட்டமிடல் பணிப்பாளரை கைது செய்துள்ளதுடன், பிரதேச செயலாளரையும் கைது செய்துள்ளனர்.

குறித்த இருவரிடமும் ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் மன்றில் ஆஜர்படுத்தினர்.

(அக்கரைப்பற்று மேற்கு தினகரன் நிருபர் - எஸ்.ரி. ஜமால்தீன்)

Sat, 05/30/2020 - 14:43


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை