ஆடை உற்பத்தித்துறைக்கு சர்வதேச சந்தை வாய்ப்பை பெற்றுத் தர அமெரிக்கா இணக்கம்

அமெரிக்க தூதுவர் பிரமதருடன் சந்திப்பு

இலங்கையின் ஆடை உற்பத்தித்துறைக்கு சர்வதேச சந்தை வாய்ப்பை பெற்றுத் தருவதற்கு அமெரிக்கா இணக்கம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலியானா டெப்லிட்ஸ் நேற்றுக் காலை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கொவிட்-19னின் தற்போதைய நிலை அதன் பின்னரான பொருளாதார சவால்கள் மற்றும் இரு நாடுகளாலும் இணைந்து முன்னெடுக்கக்கூடிய செயற்பாடுகள் என்பன தொடர்பில் கலந்துரையாடினார்.

இதன்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இலங்கையின் முன்னணி ஆடைத் தொழிற்சாலைகள் தற்போது தனிப்பட்ட பாதுகாப்பு அங்கிகளை உற்பத்தி செய்து வருவது தொடர்பில் அமெரிக்க தூதுவரின் கவனத்துக்கு கொண்டு வந்ததுடன் அதற்கான ஒத்துழைப்பு மற்றும் சந்தைவாய்ப்பை அமெரிக்கா பெற்றுத் தர வேண்டுமென்ற கோரிக்கையையும் முன்வைத்தார்.

அதற்கு இணக்கம் தெரிவித்த அமெரிக்கத் தூதுவர், அமெரிக்கத் தூதரகம் ஏற்கனவே பல நிறுவனங்களின் உற்பத்திகளுக்கு அமெரிக்காவில் சந்தைவாய்ப்பை பெற்றுக் கொடுப்பதற்கான முயற்சிகளில் களமிறங்கியிருப்பதாகவும் பிரதமரிடம் சுட்டிக்காட்டினார். அத்துடன் இலங்கையின் முன்னணி, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் யாவும் இந்த  இக்கட்டான நிலையிலிருந்து விரைவில் மீட்சியை சந்திக்க விரும்புவதாகவும் அவர் பிரதமரிடம் தெரிவித்தார்.

மேலும் இச்சந்திப்பின்போது இருநாட்டிலும் முன்னெடுக்கப்படவுள்ள தேர்தல்கள் மற்றும் கொவிட்-19 தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதன் பின்னர் இரு அரசாங்கங்களும் இணைந்து முன்னெடுக்கப்பட வேண்டிய அசெயற்பாடுகள் என்பன தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

லக்ஷ்மி பரசுராமன்

Thu, 05/07/2020 - 13:08


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை