கப்பலொன்றில் நோய்வாய்ப்பட்ட இந்திய பிரஜை இலங்கைக்கு

சர்வதேச வணிகக் கப்பலொன்றில் பணி புரிந்து வந்த இந்திய பிரஜை ஒருவர் சுகவீனமடைந்துள்ள நிலையில், கடற்படையினரால் கொழும்புத் துறைமுகத்திற்கு பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டுள்ளார்.

குறித்த வணிகக் கப்பலானது, ஜிபுத்தி நாட்டில் (Djibouti) பதிவு செய்யப்பட்டதாகும் என கடற்படை அறிவித்துள்ளது.

கடலில் இக்கப்பலானது பயணித்துக் கொண்டிருந்த வேளையில்  குறித்த இந்திய பிரஜை சுகவீனமடைந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு சிகிச்சை வழங்கும் பொருட்டு கொழும்பிற்கு அழைத்துவர கப்பலில் பணியாற்றும் உள்ளூர் முகவரினால், இலங்கை பாதுகாப்பு அமைச்சிடம் உதவி நாடப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவரை நேற்றையதினம் (15)  கொழும்புத் துறைமுகத்திற்கு அழைத்துவர கடற்படை உதவி புரிந்துள்ளது.

நேற்றையதினம் கடற்படையின் இரசாயனவியல், உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி (Chemical, Biological, Radiological and Nuclear-CBRN) பிரிவு, குறித்த கப்பலை அணுகி, சுகாதார நிபுணர்களால் அறிவிக்கப்பட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றி நோய்வாய்ப்பட்ட நபரை கரைக்கு அழைத்து வந்துள்ளது.

நோய்வாய்ப்பட்டவர், கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்னர் துறைமுக வளாகத்திற்குள் வைத்து தொற்றுநீக்கம் செய்யப்பட்டதாக, கடற்படை தெரிவித்துள்ளது.

Thu, 04/16/2020 - 18:58


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை