'களம்பு டெலிகிராஃப்’ இணையதளத்திடம் இக்பால் அத்தாஸ் நஷ்டஈடு கோரிக்கை

'களம்பு டெலிகிராஃப்’ இணையதளத்திடம் இக்பால் அத்தாஸ் நஷ்டஈடு கோரிக்கை-Iqbal Athas-Claims Compensation From Colombo Telegraph

தமது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தகவல் வெளியிட்டுள்ளதாக ‘களம்பு டெலிகிராஃப்' (Colombo Telegraph)இணையத்தளத்தின் ஆசிரியர் உச்சிந்து குருகுல சூரியவுக்கு எதிராக, இலங்கையின் சிரேஷ்ட ஊடகவியலாளரும் தேசிய சர்வதேச பாதுகாப்புத்துறை தொடர்பான ஊடகவியலாளருமான இக்பால் அத்தாஸ், நஷ்டஈடாக 30,000 ஸ்ட்ரேலிங் பவுண் கோரி கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

தமது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் போலியாக தயாரிக்கப்பட்ட கட்டுரை ஒன்றை அடிப்படையாகக் கொண்டு போலியான தகவல்கள் அடங்கிய கட்டுரையொன்றை பிரசுரித்தமைக்காகவே, லண்டனை மையமாகக்கொண்டு செயற்படும் 'களம்பு டெலிகிராஃப்' இணையத்தளத்தின் ஆசிரியர் உச்சிந்து குருகுல சூரியவுக்கு எதிராக இக்கடிதத்தை அனுப்பியுள்ளதாக அவரது சட்டத்தரணிகள் தெரிவிக்கின்றனர்.

இக்பால் அத்தாஸ் சண்டே டைம்ஸ் பத்திரிகையின் ஆலோசனை ஆசிரியராகவும் அரசியல் ஆசிரியராகவும் செயற்பட்டு வருகின்றார்.

அவரது சட்டத்தரணியான லண்டனிலுள்ள பென்ஷன் இதுபற்றித் தெரிவிக்கையில், களம்பு டெலிகிராஃப் லண்டனை மையமாகக் கொண்டு செயல்படுகிறது என்றும் அதற்கிணங்க லண்டனில் இந்த வழக்கை தொடர தாம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை தாம் எந்த போலியான கட்டுரையையும் தயாரித்து அதனை பிரசுரப்படுத்தவில்லையென்று கூறும் இக்பால் அத்தாஸ்,மேற்படி இணையத்தள ஆசிரியரான உச்சிந்து குருகுல சூரிய, அவ்வாறானதொரு போலி கட்டுரையை தயாரித்து தனக்கு சேறு பூசும் வகையில் செயற்பட்டுள்ளதாக இக்பால் அத்தாஸ் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்புத்துறை ஊடகவியலாளராக செயற்படும் இக்பால் அத்தாஸ் தேசிய சர்வதேச ரீதியில் பல விருதுகளை பெற்றுக்கொண்டுள்ளார்.

'களம்பு டெலிகிராஃப்' இணையத்தளம் இங்கிலாந்தை மையமாகக் கொண்டு தவறாக பயன்படுத்தப்படும் ஒரு தளம் என்றும் குற்றஞ்சாட்டும் இக்பால் அத்தாஸின் சட்டத்தரணி மேற்படி அபகீர்த்திக்காக 30,000 ஸ்ட்ரேலின் பவுணையும் பகிரங்க மன்னிப்பையும் கோரவேண்டுமென்றும் தெரிவித்துள்ளார். (ஸ)

Mon, 04/27/2020 - 12:10


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை