நுவரெலியா மாவட்ட விவசாயிகளின் விளைச்சலுக்கு ஏற்ற விலை இல்லை

நுவரெலியா மாவட்டத்தில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் விவசாயிகளுக்கு தமது விளைச்சல்களை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

நாட்டிலுள்ள பொருளாதார மத்திய நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாலும், ஊரடங்குச் சட்டம் அமுலில் இருப்பதாலும் மொத்த வியாபாரிகள் தமது பகுதிகளுக்கு வருவதில்லை என்றும், மரக்கறி வகைகளை விற்பனை செய்ய முடியாமல் இருப்பதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இதனால் அறுவடைசெய்ய வேண்டிய கட்டத்தில் இருக்கும் மரக்கறிகள் பழுதடைய ஆரம்பித்துள்ளன. இதனை தமக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் சில வியாபாரிகள், குறைந்த விலைக்கு விளைச்சல்களை வாங்கி வருகின்றனர்.

அத்துடன், மரக்கறி தோட்டங்களில் வேலைசெய்த ஊழியர்களுக்கு சம்பளத்தை கூட வழங்கமுடியாத நிலைக்கு தாம் தள்ளப்பட்டுள்ளதாகவும், இதனால் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்துக்கு வருகை தந்திருந்த விவசாயிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பில் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான இராதாகிருஷ்ணனிடம் வினவியபோது,

“அரசால் முன்னெடுக்கப்படும் இந்த வேலைத்திட்டம் குறித்து திருப்திகொள்ள முடியாது. சிறு வியாபாரிகளுக்கு பொருளாதார மத்திய நிலையங்களுக்கு வந்து, மரக்கறி வகைகளை கொள்வனவு செய்யமுடியாத நிலை ஏற்படும். ஒரு புறத்தில் விவசாயிகளும், மறுபுறத்தில் விற்பனையாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் எதிர்காலத்தில் அரசாங்கத்துக்கு பாரிய பிரச்சினைக்கு முகங்கொடுக்கவேண்டிவரும்.

மரக்கறி விவசாயிககள் மரக்கறி வகைகளை குழிதோண்டி புதைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அரசாங்கம் தலையிட்டு தீர்வை பெற்றுதரவேண்டும்” - என்றார்.

Fri, 04/10/2020 - 08:05


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை