3 கட்டங்களில் பல்கலைக்கழக நடவடிக்கைகள் மீள ஆரம்பம்

3 கட்டங்களில் பல்கலைக்கழக நடவடிக்கைகள் மீள ஆரம்பம்-University Re Opening Under 4 Level-UGC Chairman Professor Sampath Amaratunge

மே 04 - பல்கலை கல்வி சார் மற்றும் கல்வி சாரா பணிக்குழாம்
மே 11 - அனைத்து இறுதி ஆண்டு மாணவர்கள்
மே 18 - ஏனைய அனைத்து பல்கலை கற்கை மாணவர்கள்

இலங்கையில் உள்ள பல்கலைக்கழகங்களின் நடவடிக்கைகள் அனைத்தும் 3 கட்டங்களாக ஆரம்பிக்கப்படவுள்ளதாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.

இன்றைய தினம் (12) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மே 04ஆம் திகதி
அதற்கமைய எதிர்வரும் மே மாதம் 04ஆம் தேதி பல்கலைக்கழக கல்வி சார் மற்றும் கல்வி சாராத பணிக் குழாம், தமது பணிகளை ஆரம்பிக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன்போது அத்தியாவசிய சேவை தொடர்பில், பேராசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களை அழைப்பது தொடர்பிலான முடிவுகளை மேற்கொள்வதற்கு, பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கு அதிகாரம் வழங்கப்படும் என அவர் சுட்டிக்காட்டினார்.

மே 11ஆம் திகதி
அதனைத் தொடர்ந்து, பல்கலைக்கழகங்களின் பீடங்களில் கற்க இறுதி ஆண்டு மாணவர்களுக்கு எதிர்வரும் மே 11ஆம் திகதி கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

இதன்போது 5 ஆம் வருட வைத்திய பீடம், 4 ஆம் வருட அனைத்து விதமான விசேட  பட்டங்கள், கௌரவப் பட்டங்கள், 3ஆம் வருட சாதாரண பட்டங்கள் உள்ளிட்ட அனைத்து இறுதி வருட கற்கையில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் இதன்போது அழைக்கப்படுவார்கள் என அவர் தெரிவித்தார்.

மே 11ஆம் திகதி
ஏனைய மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் அதற்கு அடுத்த வாரத்தில், மே மாதம் 18ஆம் திகதி ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.

அத்துடன், பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் போது, கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில்  மேற்கொள்ளவேண்டிய சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில், சுகாதார அமைச்சுடன் இணைந்து மிக விரைவில் சுற்றுநிருபம் ஒன்றை வெளியிடுவதற்கு எதிர்பார்ப்பதாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார். 

கொரோனா வைரஸ் பரவலை அடுத்து, அனைத்து பல்கலைக்கழகங்க நடவடிக்கைகளும் கடந்த மார்ச 14ஆம் திகதி முதல் இரு வாரங்களுக்கு மூடப்படுவதாக, பல்கலைக்கழ மானியங்கள் ஆணைக்குழு அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Sun, 04/12/2020 - 16:07


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை