கொவிட்-19 தொற்று ஒழிப்பு இலங்கையும் இந்தியாவும் இணைந்து செயற்பட இணக்கம்

கொவிட்-19 தொற்றை ஒழிப்பதற்கு இலங்கையும் இந்தியாவும் இணைந்து செயற்படுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளன.

இலங்கைக்கான பதில் இந்திய உயர்ஸ்தானிகர் வினோத் கே. ஜேக்கப், இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவை அண்மையில் கொழும்பில் சந்தித்து உரையாடியபோதே இவர்கள் மேற்படி இணக்கம் தெரிவித்துள்ளனர்.

இச்சந்திப்பின்போது இலங்கையிலும் இந்தியாவிலும் கொவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கங்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டங்கள் தொடர்பில்  இருவரும் விளக்கமளித்தனர். இதனை தொடர்ந்தே இரு நாடுகளும் இணைந்து இவ் வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதற்கும் இணக்கம் கண்டனர்.

ஒவ்வொரு நாடும் தனித்தனியாக செயற்பட்டு வரும் இக்கால கட்டத்தில் இணைந்து செயற்படுவதானது இந்நோய்க்குப் பின்னரான பொருளாதார மீட்சிக்கு பேருதவியாக இருக்குமென்றும் இச்சந்திப்பின்போது சுட்டிக்காட்டப்பட்டது. மேலும் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சரின் இந்திய விஜயங்களின்போது இணக்கம் காணப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டது.

Thu, 04/23/2020 - 11:57


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை