எரிபொருள் விலையை 41 வீதம் குறையுங்கள்

உலகச் சந்தையில் மசகு எண்ணெயின் விலை குறைந்திருப்பதற்குச் சமாந்தரமாக இலங்கை எரிபொருட்களின் விலையை 41 சதவீதத்தால் உடனடியாகக் குறைத்து விலைக்குறைப்பின் பயனை மக்களுக்குப் பெற்றுக்கொடுக்க வேண்டுமென வலியுறுத்தியிருக்கும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச மக்களை ஏமாற்றும் விதத்தில் அரசாங்கம் நடக்க முற்பட்டால் மக்களை அணிதிரட்டி ஜனநாயக வழிப் போராட்டத்திலிறங்கப் போவதாக எச்சரித்துள்ளார்.

மக்களுக்குரிய உரிமைகளைப் பெற்றுக்கொடுக்கும் எமது செயற்பாடுகளுக்கு அரசியல் சாயம் பூசி மக்களை தவறாக வழிநடத்துவதற்கு இடமளிக்கப் போவதில்லை எனவும் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.

கோட்டே, எதுல்கோட்டேயில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான தேர்தல் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

ஒரு மாதத்துக்கு முன்னர் எரிபொருளின் விலையை உலக சந்தை விலைக்குறைப்புக்கேற்றவிதத்தில் குறைக்குமாறு நான் பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தேன். அதன் போது ஜனவரி மாதத்தில் மசகு எண்ணெய் 62.65 டொலரிலிருந்து 36.80 டொலராக குறைந்திருந்தது. இன்று மசகு எண்ணெய் 41.11 வீதத்தால் குறைந்துள்ளது. இதன் பயனை நாட்டு மக்களுக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும். 137 ரூபாவுக்கு விற்கப்படும் பெற்றோலை 81 ரூபாவுக்கு பெற்றுக்கொடுக்க முடியும். அதே போன்று டீசலை ரூபா 61.25 சதத்துக்கும் ஒக்ரேன் 95 பெற்றோலை 94 ருபாவுக்கும் சுப்பர் டிசலை 97 ரூபாவுக்கும் மண்ணெண்ணெயை 40 ரூபாவுக்கும் பெற்றுக் கொடுக்க முடியும். சமையல் எரிவாயுவை 1493 ரூபாவிலிருந்து ஆயிரம் ரூபாவாக குறைக்கப்பட வேண்டும்.

நாம் கோரும் 41 சதவீத எரிபொருள் விலைக்குறைப்பை உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும். மக்களை ஏமாற்றும் விதத்தில் அமைச்சரவையில் செயற்பட முயற்சித்தால், மக்களின் உரிமையை பெற்றுக்கொடுக்க ஜனநாயக ரீதியிலான போராட்டத்தில் ஈடுபடுவொம்.

எம். ஏ. எம். நிலாம்

Wed, 03/11/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை