வடக்கு, கிழக்கு பகுதியில் 28,000 நிரந்தர வீடுகள்

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் ​சேர்ந்த மக்களுக்காக புதிதாக 28,000 நிரந்தர வீடுகளை நிர்மாணிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய நவீன கொங்கிரீட் பெனல் வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. முதற்கட்டமாக ஓடுகளுடனான 7,000 வீடுகளை அமைக்க அமைச்சரவை இதற்கு முன்னர் அங்கீகாரம் வழங்கியிருந்தது. இருப்பினும், எதிர்பார்த்த வகையில் திட்டத்திற்கு தேவையான நிதியைப் பெற்றுக் கொள்ள முடியாததால், ஆரம்பத்தில் 1,000 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.

இதற்கான நிதியை இலங்கை வங்கியிடமிருந்து கடனாகப் பெற்றுக் கொள்ள திறைசேரி நடவடிக்கை எடுத்துள்ளது.இதற்கமைவாக (Yapka Developers Pvt Ltd ) "யப்கா டிவலெபர்ஸ் தனியார்" நிறுவனத்துடன் வர்த்தக ஒப்பந்தமொன்று கையெழுத்திடப்பட்டுள்ளது. 2020 பெப்ரவரி 02 ஆம் திகதி திட்டப்பணிகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளன.இது தொடர்பில் சமூக ஊக்குவிப்பு தோட்ட அடிப்படை வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், அமைச்சரவைக்கு தெளிவுபடுத்தி உள்ளார்.இந்த வீடுகளுக்கு தலா 12 இலட்சம் ரூபா செலவிடப்படவுள்ளதாக இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

இது தவிர வருடாந்தம் கிராம சேவகர் மட்டத்தில் 14,500 வீடுகளை நிர்மாணிக்கும் திட்டமும் ஆரம்பிக்கப்பட்டு ள்ளதால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் காலத்தினுள் வீட்டுப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வழங்கப்படும் எனவும் கூறினார்.

இதே ​வேளை, கொழும்பு, ஸ்டேடியம்கமவில் 1,000 அலகு வீடமைப்பு திட்டமொன்றை முன்னெடுக்கவும் அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

2010 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை தீர்மானத்துக்கு அமைவாக கொழும்பு நகரில் குறைந்த வசதிகளுடனான குடியிருப்புக்களில் வாழும் பொது மக்களின் வீட்டு தேவைக்கான வசதிகளை செய்யும் பொருட்டு 'கொழும்பு நகர்புற மறுமலர்ச்சி திட்டம்' ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு தேவையான நிதியின் ஒரு பகுதி ஆசிய அடிப்படை வசதி முதலீட்டு வங்கியினால் பெறப்படும் . இதன் கீழ் ஸ்டேடியம்கம வீடமைப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக ஒரு வீடு 550 சதுர அடியைக் கொண்டதாக 1000 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.

இந்த 1,000 வீட்டுத் திட்டத்தை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம், பெறுகை மேல்முறையீட்டு சபையின் சிபாரிசுக்கு அமைய எச்சஸ் பொறியியல் நிறுவனமத்திற்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தவிர ஒபேசேகரபுரவில் 300 வீடுகளைக் கொண்ட திட்டமொன்றை முன்னெடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு நகர்ப்புற மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் ஆசிய அபிவிருத்தி அடிப்படை வசதி முதலீட்டு வங்கியின் கடன் வசதியின் மூலம்இவற்றை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒபேசேகரபுர வீடமைப்பு திட்டம் 550 சதுர அடிகளைக் கொண்ட 300 வீடுகளைக் கொண்டதாகும். இதற்கான 1,723.35 மில்லியன் ரூபா செலவிடப்படும். சுபசிங்க கொன்ஸ்டரக்‌ஷன் நிறுவனத்திற்கு இதற்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. (பா)

ஷம்ஸ் பாஹிம் 

 

Fri, 03/06/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை