கொரோனா; சந்தேகத்தில் இதுவரை 19 பேர் அனுமதி

பதுளையில் மூவர் கண்காணிப்பில் 

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் நாடு முழுவதும் அடையாளப் படுத்தப்பட்டுள்ள வைத்தியசாலைகளில் 19 பேர் சிகிச்சை பெற்றுவருவதாகவும் நேற்றையதினம் இரண்டு பேர் மேலதிகமாக பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தொற்றுநோய் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்தார்.  

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவாமல் இருப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து பலப்படுத்தப்பட்டே உள்ளன. சந்தேகத்துக்கு உட்படும் சில சுற்றுலாப் பயணிகளும் 14 நாட்களுக்கு கண்காணிக்கப்படுகின்றனர்.   வெளிநாடுகளிலிருந்து வரும் இலங்கையர்கள் சந்தேகத்தின் பேரில் வைத்தியசாலைகளில் அனுமதியாகி சிகிச்சை பெறுகின்றனர்.

நேற்று கொரியாவிலிருந்து இலங்கைக்கு வந்திருந்த இரண்டு பேர், பதுளையில் அனுமதிக்கப்பட்டனர். பதுளையில் ஏற்கனவே மூன்று பேர் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பிலான சந்தேகத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது மொத்தமாக 19 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதுடன், எவருக்கும் கொரோனா வைரஸ் தாக்கம் இல்லையெனவும் அவர் கூறினார்.

இதேவேளை, கொரோனா நோய்த்தொற்று  ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த மூவர், பதுளை அரசினர் மருத்துமனை விசேட சிகிச்சைப்பிரிவில் தனித்தனியாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  

தாய், தந்தை, ஏழு வயது மகன் என்ற வகையில்,மூவரும் சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு விசேட சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

இவர்களில் ஏழு வயது நிரம்பிய சிறுவனுக்கு தடிமன், காய்ச்சல் காணப்பட்டதால் கொரோனா நோய்க்கான அறிகுறிகளாக இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டதையடுத்து, பெற்றோர் அவரை பதுளை அரசினர் மருத்துவமனைக்கு கொண்டு வந்து அனுமதித்தனர்.  இதையடுத்து, அச்சிறுவனின்  தாயையும், தந்தையையும் விசேட சிகிச்சைப்பிரிவில் அனுமதித்தனர்.

அத்துடன் இம்மூவரும் தனித்தனியாக விசேட சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

இம்மூவரும் தென்கொரியாவில் வசித்து வந்த இலங்கையர்களாவர். தென்கொரியாவில் கொரோனா நோய் பரவுவதையடுத்து, இம்மூவரும் அச்சம் கொண்டு தமது சொந்த நாடான இலங்கைக்கு பண்டாரவளைப் பகுதியில்  அம்பிட்டிய என்ற கிராமத்து வந்து சேர்ந்தனர். கடந்த 27ஆம் திகதி வந்து சேர்ந்த ஒரு வாரத்தில் சிறுவனுக்கு கொரோனா நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டன. இதையடுத்தே, இம்மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

சுப்பிரமணியம் நிஷாந்தன், பதுளை தினகரன் விசேட நிருபர்    

Thu, 03/05/2020 - 09:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை