கூட்டணி அமைவதை தடுக்கவே சின்னம் பிரச்சினை முன்வைப்பு

இரு நாட்களில் கூட்டணி அதிகாரபூர்வ அறிவிப்பு

சின்னத்தை மாத்திரம் வைத்து, கண்ணை மூடிக்கொண்டு வாக்களிப்பவர்கள்மலையக மக்கள் எனக்கூறி அந்த மக்களை அவமானப்படுத்த வேண்டாம். கடந்த காலங்களில் அவர்கள், யானை, பூனை, அன்னம், வெற்றிலை, வேப்பிலை, ஏணி என எத்தனையோ சின்னங்களுக்கு சிந்தித்து வாக்களித்துள்ளனர். பல சந்தர்ப்பங்களில் நகர மக்களை விட அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். சிலருக்கு யானை சின்னம் வேண்டும் என்பதற்காக மலையக மக்களை இதில் இழுக்க முயல்கிறார்கள் என்று கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

மலையகத்தோர் கண்ணை மூடிக்கொண்டு வாக்களிக்கும் மக்கள் என கூறுகிறார்கள். அப்படி கூறி அவர்களை அவமானப்படுத்த வேண்டாம். அவமானப்படுத்தி என் கோபத்தை கிளற வேண்டாம். எனக்கு வெறுப்பேற்றினால் நான் சும்மா இருக்க மாட்டேன் என்றும் அவர் கூறினார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது,

உண்மையில் இங்கே சின்னம் ஒரு பிரச்சினை இல்லை. அது ' டீலர்' களின் பிரச்சினை. நான் "டீலர்" இல்லை.

நான் ஒரு "லீடர்". எங்களை பொறுத்தவரையில், யானை கிடைத்தால் நல்லது. அன்னம் கிடைத்தாலும் நல்லது. எமது கூட்டணிக்கு யானையை தர யார் மறுக்கிறார்கள் என தேடி பாருங்கள். அப்போது உரிய விடை கிடைக்கும். இவர்களது நோக்கம் இப்படி எதையாவது சொல்லி, எமது கூட்டணி அமைவதை தாமதம் செய்வது ஆகும். இந்த தந்திரம் எம்மிடம் இந்த முறை பலிக்காது. இன்னும் இரண்டு தினங்களில் நாம் எமது கூட்டணி அமைவதை அதிகாரபூர்வமாக நாம் அறிவிப்போம்.

Mon, 02/24/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை