சின்னம் குறித்து சு.கவுக்கு பிரச்சினையில்லை; ஐ.தே.கவிற்கு எதிரான கூட்டணியே இலக்கு

பொதுத் தேர்தலில் எந்தச் சின்னத்தில் போட்டியிடுவது என்பது தொடர்பில் எமக்குப் பிரச்சினை கிடையாது. ஐ.தே.கவிற்கு எதிரான பரந்த சக்திகளை இணைத்து தேர்தலில் வெற்றியீட்டுவதே பிரதான இலக்கென சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். மஹியங்கனை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அமைச்சர், கைச் சின்னத்திலா? கதிரைச் சின்னத்திலா? மொட்டுச் சின்னத்திலா? போட்டியிடுவது என்பது தொடர்பில் பலரும் கருத்துக் கூறி வருகின்றனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுடனும் பொதுஜன பெரமுனவுடனும் சு.க ஒப்பந்தம் கைச்சாத்திட்டுள்ளது. அதனால் சின்னம் எதுவாக இருந்தாலும் எமக்கு பிரச்சினை கிடையாது. ஒன்றாகக் கூட்டணி அமைத்து ஐ.தே.கவிற்கு எதிரான சகல அரசியல் கட்சிகளையும் இணைத்து போட்டியிடுவதே பிரதானமானது. கூட்டணி அமைப்பது கட்டாயம் என பஷில் ராஜபக்ஷ கூறியிருக் கிறார். உயர் மட்டத் தலைமைகளை இணைத்து கிராமத்தில் அரசியல் செய்யக்கூடிய சூழலை உருவாக்குவோம். ஒழுக்கக் கட்டுப்பாடுள்ள நாடொன்றை உருவாக்க தேவையான தலைமைத்துவத்தை கோட்டாபய ராஜபக்‌ஷ வழங்கி வருகிறார். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அவர் முன்மாதிரியான தேர்தல் செயற்பாட்டில் ஈடுபட்டார். அவர் தனது பெயரை எந்த இடத்திலும் எழுதவோ சுவரொட்டிகளை ஒட்டவோ இல்லை.

இந்த முன்மாதிரியை மற்றவர்களும் பின்பற்ற வேண்டும். பதவிக்கு வந்த சில நாட்களிலே மக்களுக்கு பல நிவாரணங்கள் வழங்கினார். கிழங்கு. சோளம்,பாசிப்பயறு போன்றவற்றை இறக்குமதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகளின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதற் காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் மேலும் நிவாரணங்கள் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.(பா)

 

Tue, 02/11/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை