சுதந்திரத்திற்கு முஸ்லிம்கள் அர்ப்பணிப்போடு செயற்பட்டனர்

தாய் நாட்டின் சுதந்திரத்திற்காக முஸ்லிம்களும் அர்ப்பணிப்போடு பாடுபட்டுள்ளார்கள் என வடமேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மில் தெரிவித்தார்.

இலங்கையின் 72ஆவது சுதந்திர தின இஸ்லாமிய சமய பிரதான நிகழ்வு கொழும்பு, கொள்ளுப்பிட்டி ஜூம்ஆ பள்ளிவாசலில் நேற்று நடைபெற்றபோது அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமரும் சமய அலுவல்கள் அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலில் முஸ்லிம் சமய கலாசார திணைக்கள பணிப்பாளர் அஷ்ரப் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

முன்னாள் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், பைசர் முஸ்தபா, பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், ஏ.எச்.எம்.பௌசி முன்னாள் ஆளுநர் நஜீப் ஏ மஜீத், பிரதமரின் இணைப்பாளர் பர்ஷான் மன்ஸூர் உள்ளிட்ட பெரும் எண்ணிக்கையிலானவர்கள் கலந்து கொண்டனர். இங்கு பிரதமரின் சுதந்திரதின வாழ்த்துச் செய்தியை ஜனாதிபதி  சட்டத்தரணி அலிசப்ரி வாசித்தார்.

இங்கு ஆளுநர் மேலும் உரையாற்றுகையில், இன்று முஸ்லிம்கள் சிங்கள மக்களுடன் இணைந்து வாழக்கூடிய சூழல் உருவாகியுள்ளது.

முஸ்லிம்கள் ஒருபோது தனியாக இந்த நாட்டில் வாழ முடியாது. பெரும்பான்மை மக்களுடன் இணைந்து செல்லும்போதுதான் எமது பாதுகாப்பு, எமது உரிமைகளை வென்றெடுக்க முடியும். அப்போதுதான் உண்மையான சுதந்திரத்தை அடைந்துகொள்ளலாம்.

இந்த நாட்டின் சுதந்திரத்திற்காக எமது மூதாதையர்களும் பாடுபட்டுள்ளார்கள் என்பதை மறந்துவிடக்கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.

 

 

கொழும்பு கோட்டை தினகரன், தெஹிவளை கல்சிஸ்ஸ விசேட நிருபர்கள்

Wed, 02/05/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை