மாணவர்களுக்கு பெற்றோர்களால் அழுத்தம் கூடாது

ஆசிரியர்மைய, பரீட்சைமைய கல்வி முறைமையிலிருந்து மாணவர்மைய கல்வி முறைமைக்கு மாற வேண்டிய காலம் உருவாகியிருக்கிறதென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

கொழும்பு ஆனந்தா கல்லூரியின் புதிய “07 மாடிக் கட்டிடம்”  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

பிள்ளைகளை ஆரம்ப பிரிவில் சேர்த்தது முதல் பாடசாலையிலிருந்து வெளியேறும் வரை பெற்றோர்களின் கவனம் பிள்ளைகள் எப்படியோ பரீட்சைகளில் சித்தியடைய வேண்டுமென்பதாகவே உள்ளது. எனினும் பிள்ளைகளுக்கு பாடசாலை வாழ்க்கையில் பெற்றோர்களின் மூலம் தேவையற்ற அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட கூடாது.

பரீட்சைகளுக்கு தோற்றி வெற்றி பெறுவதற்காக மட்டும் பிள்ளைகளை தயார்படுத்துவதல்ல, நாட்டின் பொருளாதாரத்திற்கும் சமூக முன்னேற்றத்திற்கும் செயற்திறனாக பங்களிக்கக்கூடிய ஒரு முழுமையான பிரஜையை உருவாக்குவதே எமக்கான தேவையாகும். தற்போதைய அரசாங்கத்தின் கல்வி, அபிவிருத்தி மூலோபாயங்களில் கல்வித்துறையில் பாரிய மாற்றமொன்றை மேற்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளோம். எதிர்காலத்தில் உருவாகும் பிள்ளைகளை பல்வேறு வகையான திறன்கள் மற்றும் இயலுமைகளை கொண்டவர்களாகவும் சவால்களையும் தடைகளையும் வெற்றிகொள்ளக் கூடியவர்களாகவும் மாற்ற வேண்டும்.

இன்னும் அபிவிருத்தியடைந்து வரும் ஒரு நாடு என்ற உள நிலையிலிருந்து விலகி உண்மையான முன்னேற்றத்தை பெற்றுக்கொள்வதற்கு எமக்கு ஒரு தொலைநோக்கும், திட்டமும் இருக்க வேண்டும். அந்த தொலைநோக்கும் திட்டமும் அரசாங்கத்திடம் உள்ளது. எதிர்காலத்தில் மேற்கொள்வதற்கு பல்வேறு பணிகள் உள்ளன.

நாம் வெற்றிகொள்வதற்கு பல்வேறு சவால்கள் உள்ளன. கடந்த காலங்களில் பாரிய சவால்களை வெற்றிகொண்ட ஒரு தேசம் என்ற வகையில் எதிர்காலத்திலும் அதனை செய்வதற்கு எமக்கு முடியும். இதற்கு தேவையாக இருப்பது ஒற்றுமையும் உரிய தலைமைத்துவமும் என்றார்.

Sun, 02/09/2020 - 13:15


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை