தேர்தலில் தோற்றவர்களுக்கு தேசிய பட்டியலில் வாய்ப்பில்லை

'மார்ச் 12' அமைப்பிடம் பிரதமர் உறுதி

தேர்தலில் தோல்வியடைபவர்களை தேசிய பட்டியலினூடாக ஒருபோதும் நியமிக்கப் போவதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பின் தலைவரான பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ உறுதிபட தெரிவித்துள்ளார்.

இது தவிர ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பினூடாக எதிர்வருத் பொதுத் தேர்தலில் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு கூடுதல் வாய்ப்பு வழங்கப்படுமெனவும் அவர் அறிவித்துள்ளார்.

'மார்ச் 12' அமைப்பினருடன் நேற்று நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியதாக அந்த அமைப்பின் ஏற்பாட்டாளரும் பெப்ரல்  அமைப்பின் பணிப்பாளருமான ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

மார்ச் 12 அமைப்பிற்கும் பிரதமருக்குமிடையிலான சந்திப்பு பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.மோசடிகளுடன் தொடர்பற்ற அரசியல்வாதிகளை தேர்தலில் நிறுத்துவது குறித்து இந்த அமைப்பு ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பின் தலைவருடன் கலந்துரையாடியுள்ளது.

இதில் மார்ச் 12 அமைப்பு முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர். இந்த சந்திப்பு தொடர்பில் கருத்துத் தெரிவித்த அமைப்பின் ஏற்பாட்டாளரும் பெப்ரல் அமைப்பின் பணிப்பாளருமான ரோஹண ஹெட்டியாரச்சி கூறியதாவது.

பொதுத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் எமது அமைப்பு ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பின் தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தது. பாராளுமன்றத்திற்கு திறமையுள்ள தூர நோக்கான நபர்களை அனுப்பும் வகையில் வேட்புமனு வழங்குமாறு கோரினோம்.பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு கூடுதல் வாய்ப்பளிக்குமாறும் கேட்டுக் கொண்டோம்.

தோல்வியடைந்தவர்களை தேசிய பட்டியலினூடாக நியமிக்க வேண்டாம் எனவும் வலியுறுத்தினோம்.

இதற்குப் பதிலளித்த பிரதமர், தனது தலைமையிலான கூட்டணியில் தோற்றவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படாது என்று தெரிவித்தார்.

தான் இதற்கு முன்னர் தலைமை வகித்த சமயத்திலும் தோற்றவர்களுக்கு இடமளிக்கவில்லை என்றும் பிரதமர் எங்களிடம் கூறினார்.

மார்ச் 12 அமைப்பு எதிருவரும் மார்ச் 12 ஆம் திகதி புதிய அறிக்கையொன்றை அரசியல் கட்சி தலைவர்களுக்கு வழங்க உள்ளதோடு இது தொடர்பான அழைப்பிதழும் பிரதமருக்கு கையளிக்கப்பட்டது.

மேற்படி அமைப்பு ஏனைய கட்சித் தலைவர்களையும் சந்திக்க உள்ளதாக அறிய வருகிறது.(பா)

 

ஷம்ஸ் பாஹிம்

Wed, 02/26/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை