புட்டின் ஆட்சியில் நீடிப்பதற்காக ரஷ்ய அரசு திடீர் இராஜினாமா

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தொடர்ந்து அதிகாரத்தில் நீடிக்கும் சாத்தியம் கொண்டதாக அரசியலமைப்பில் மாற்றம் கொண்டுவருவது குறித்த அறிவிப்பை அடுத்து அந்நாட்டு அரசாங்கம் பதவி விலகியுள்ளது.

பரிந்துரைக்கப்பட்டிருக்கும் புதிய அரசியலமைப்புக்கு பொதுமக்கள் ஆதரவு வழங்கினால் ஜனாதிபதியிடம் இருந்து அதிகாரம் பாராளுமன்றத்திற்கு மாற்றப்படும்.

புட்டின் தனது நான்காவது தவணைக் காலம் முடிவுறும் 2024 ஆம் ஆண்டில் ஜனாதிபதி பதவியில் இருந்து விடைபெறவுள்ளார். இந்நிலையில் அவர் அதிகாரத்தை நீடிக்கும் முயற்சியாகவே அரசியல் அமைப்பில் மாற்றம் கொண்டுவரும் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

நாட்டு மக்களுக்கான தனது ஆண்டு உரையிலேயே புட்டின் இந்தத் திட்டத்தை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து ஒரு எதிர்பாராத நகர்வாக இந்த மாற்றத்திற்கு உதவியாக அரசாங்கம் பதவி விலகுகிறது என்று பிரதமர் ட்மிட்ரி மெட்வெடேவ் அறிவித்தார்.

எனினும் அரசு பதவி விலகுவது பற்றி அமைச்சர்களுக்குக் கூட தெரிந்திருக்கவில்லை என்று அரச வட்டாரங்கள் மூலம் தெரியவருகிறது. “இது முழுமையாக அதிர்ச்சியை தந்தது” என்று ஒரு தரப்பு கூறியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜனாதிபதியிடம் இருந்து பாராளுமன்றத்திற்கு அதிகாரத்த மாற்ற பாராளுமன்றத்தின் இரு அவைகள் மற்றும் தேசிய வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று ரஷ்ய ஜனாதிபதி தனது உரையில் குறிப்பிட்டார். அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கு அமைய பிரதமர் மற்றும் அமைச்சரவையை நியமிக்கும் பொறும் பாராளுமன்ற கீழவைக்கு வழங்கப்படவுள்ளது.

மாநில சபை என்று அழைக்கப்படும் ஆலோசனைக் குழுவின் பொறுப்புகளை அதிகரிக்கவும் புட்டின் வலியுறுத்தியுள்ளார். இந்த மாநில சபையின் தலைவராக புட்டின் இருப்பதோடு இதில் ரஷ்ய பெடரல் பிராந்தியங்களின் தலைவர்கள் அங்கம் வகிக்கின்றனர்.

சர்வதேச சட்டத்தின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துதல், வெளிநாட்டு குடியுரிமை அல்லது வெளிநாட்டில் இருந்து வந்து ரஷ்யாவில் வாழ அனுமதி பெற்றவர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதை தடைசெய்யும் சட்டங்களை வலிமைப்படுத்துதல் உள்ளிட்ட விடயங்களும் அரசியலமைப்பு மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

மேலும் ரஷ்யாவில் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பான திட்டங்களையும் ஜனாதிபதி வெளியிட்டார். 1990களில் ரஷ்யாவின் மக்கள் தொகையில் வியக்கத்தக்க அளவு சரிவு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் புட்டின் அருகில் இருக்க பிரதமர் மெட்வெடெவ் அரசின் இராஜினாமா அறிவிப்பை தேசிய தொலைக்காட்சியில் வெளியிட்டார்.

“இந்த மாற்றம் அமுலுக்கு வரும்போது, அரசியலமைப்பில் ஒட்டுமொத்த சரத்துகள் மாத்திரம் மாறாது, நிறைவேற்று, சட்டவாக்கம் மற்றும் நீதித்துரையின் அதிகாரத்தில் சமநிலை ஏற்படும்” என்று புட்டினின் பரிந்துரை பற்றி மெட்வெடெவ் தெரிவித்தார்.

“இந்த சூழலில் அரசு அதன் தற்போதைய வடிவத்தில் இருந்து விலகிக்கொள்கிறது” என்று மெட்வெடெவ் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து தேசிய பாதுகாப்பு கெளன்சிலின் துணைத் தலைவராக மெட்வெடெவ் நியமிக்கப்பட்டுள்ளதோடு புதிய பிரதமர் பதவிக்கு வரிச் சேவைத் தலைவர் மிகைல் மிசுஸ்டினின் பெயரை ஜனாதிபதி பரிந்துரைத்துள்ளார்.

மெட்வெடெவ் கடந்த பல ஆண்டுகளாக பிரதமராக இருந்து வருகிறார். முன்னதாக அவர் 2008 தொடக்கம் 2012 ஆம் ஆண்டு வரை ஜனாதிபதியாக இருந்ததோடு தொடர்ந்து புட்டினிடம் பதவியை மாற்றிக்கொண்டார்.

ரஷ்ய அரசியல் அமைப்பின்படி தொடர்ச்சியாக இரு தவணைகளுக்கே ஜனாதிபதி பதவியை வகிக்க முடியும்.

வாழ்நாள் முழுவதும் தலைவராக இருப்பதே புட்டினின் நோக்கம் என்று எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் ரஷ்ய அரசின் முன்னணி எதிர்ப்பாளரான அலெக்சி நவல்கி சாடியுள்ளார்.

கடைசியாக 1993 ஆம் ஆண்டு புட்டினுக்கு முன்னர் பதவியில் இருந்த ஜனாதிபதி பொரிஸ் யெல்சினின் காலத்திலேயே சர்வஜன வாக்கெடுப்பு மூலம் அரசியலமைப்பில் மாற்றம் கொண்டுவரப்பட்டது.

1999 ஆம் ஆண்டு யெல்சின் இராஜினாமா செய்ததை அடுத்து பதில் ஜனாதிபதியாக பதவி ஏற்ற புட்டி ஓர் ஆண்டுக்குப் பின்னர் ஜனாதிபதியாக பதவி ஏற்றார். அது தொடக்கம் அவர் ஜனாதிபதி அல்லது பிரதமராக தொடர்ந்து அதிகாரத்தில் உள்ளார்.

Fri, 01/17/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை