இலங்கை - சிம்பாப்வே அணிகள் இரு டெஸ்ட் போட்டிகளில் மோதல்

இலங்கை கிரிக்கெட் அணி இம்மாத இறுதிப்பகுதியில் சிம்பாப்வேயிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு வீரர்களுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடவுள்ளது. இரு அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இம்மாதம் 19ஆம் திகதி தொடக்கம் 23ஆம் திகதி வரையிலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி இம்மாதம் 27ஆம் திகதி தொடக்கம் 31ஆம் திகதி வரையிலும் நடைபெறவிருக்கின்றன. போட்டிகள் ஹராரே மைதானத்தில் இடம்பெறுகின்றன.

சிம்பாப்வே – இலங்கை அணிகள் இடையிலான இந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் உள்ளடங்காது. சர்வதேச கிரிக்கெட் சபையின் (ஐ.சி.சி. இன்) தடைக்கு உள்ளாகிய சிம்பாப்வே கிரிக்கெட் அணி குறித்த தடைக்குப் பின்னர் இலங்கை அணியுடன் விளையாடவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரே அவர்களது முதல் சர்வதேச கிரிக்கெட் தொடராக அமைகின்றது.

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் மூலமே சிம்பாப்வே 2018ஆம் ஆண்டின் நவம்பரிற்குப் பின்னர் மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடவிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த டெஸ்ட் தொடர் பற்றி கருத்து வெளியிட்டிருந்த சிம்பாப்வே கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் லால்சான்ட் ராஜ்பூட் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டிகள் சிம்பாப்வேயிற்கு ”புதிய தொடக்கம்” எனக் கூறினார்.

லால்சான்ட் ராஜ்பூட் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளை மிகவும் எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் கூறினார்.

இலங்கை கிரிக்கெட் அணி எப்போதும் சவால்தரக்கூடிய ஒரு கிரிக்கெட் அணியாக இருக்கின்றது. இந்நிலையில், அவர்கள் இப்போது நன்றாகவும் கிரிக்கெட் ஆடிவருகின்றனர். இந்த டெஸ்ட் தொடரினை மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கின்றேன்.

எங்களுக்கு இது ஒரு புதிய தொடக்கமாகும். ஒரு புதிய அத்தியாயமாகும். இப்படியான ஒரு தருணத்தை நாம் கிரிக்கெட்டின் நீண்ட வடிவம் மூலம் ஆரம்பிப்பது எமது வீரர்களின் திறமையினை இனங்காண உதவும்.

எங்களுக்கு எங்களது மைதான நிலைமைகள் நன்கு தெரியும். எங்களது வீரர்களும் போட்டிக்காக தயார் நிலையில் இருக்கின்றனர். எனவே, அவர்களை களத்திற்குள் அனுப்பி ஆட்டத்தை பார்க்க வேண்டும்.

எங்களுக்கு இப்போது நேரம் குறைவாகவே இருக்கின்றது. எனவே, வீரர்கள் கிடைக்கவுள்ள வாய்ப்பினை பயன்படுத்தி சாதிக்க நினைக்கின்றனர்

சிம்பாப்வே அணி கடைசியாக டெஸ்ட் போட்டியொன்றில் ஆடிய போது அதன் தலைவராக இருந்த ஹமில்டன் மசகட்சா ஓய்வு பெற்றிருக்கும் காரணத்தினால், இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடரில் சிம்பாப்வே அணித்தலைவராக சகலதுறை வீரரான சீன் வில்லியம்ஸ் செயற்படுவார்.

Thu, 01/09/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை