நீதிமன்றின் சுயாதீனத்துக்கு பாதிப்பு; ஆணைக்குழு அ​ைமக்க வேண்டும்

 ரஞ்சன் இறுவட்டு விவகாரம்

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் ஒலி இறுவட்டு மூலம் வெளியிடப்பட்டுள்ள விடயங்கள் நீதிமன்றத்தின் சுயாதீனத் தன்மைக்கு பெரும் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது. எனவே ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை அமைத்து அது தொடர்பில் ஆராய வேண்டியுள்ளதாக என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

நீதிமன்றத்தின் சுயாதீனத் தன்மையை பாதுகாப்பது தொடர்பில் அரசாங்கத்திற்கு பொறுப்புள்ளதாக தெரிவித்த பிரதமர், அதற்கிணங்க நீதிமன்றத்திலிருந்து வெளியாகும் தகவல்கள் தொடர்பில் பிரதம நீதியரசர் விசாரணைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

நேற்றைய தினம் அலரி மாளிகையில் இடம்பெற்ற பத்திரிகை ஆசிரியர்களுடனான சந்திப்பின் போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு கூறினார். மேலும் கூறுகையில்,

மேற்படி இறுவட்டு வெளியிட்டுள்ள தகவல்களுக்கிணங்க கடந்த காலங்களில் நீதிமன்றத்திற்கு எந்தளவு அழுத்தங்கள் இருந்திருக்கும் என்பது தெரியவருகிறது. நீதிமன்றம் தொடர்பில் மக்களுக்கு உள்ள நம்பிக்கைக்கு பங்கம் ஏற்படுவது சிறந்ததல்ல. அதனால் நீதிமன்றத்தின் அனைத்து தீர்ப்பு தொடர்பிலும் மக்கள் சந்தேகக் கண்கொண்டே பார்க்க நேரிடும்.

மேற்படி விடயம் அரசியல் பழிவாங்கலுக்காக இடம்பெற்றதொன்றல்ல. இது நீதிமன்றத்தின் சுயாதீனத் தன்மைக்கு மேற்கொள்ளப்பட்ட அழுத்தமாக கருதமுடியும் என கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும இங்கு தெரிவித்தார்.

முன்னாள் நீதியமைச்சரான விஜயதாஸ ராஜபக்ஷ வழங்கியுள்ள தகவல்களுக்கிணங்க இது ரஞ்சன் ராமநாயக்க மட்டும் சம்பந்தப்பட்ட விவகாரமல்ல. முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சரத் பொன்சேகா, பாட்டலி சம்பிக்க ரணவக்க, அஜித் பி பெரேரா, அநுர குமார திஸாநாயக்க ஆகியோர் இணைந்து அரசாங்கத்தின் அனுசரணையுடன் மேற்கொண்ட செயலாகும்.

எதிர்க் கட்சியை ஒழிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட திட்டமிடப்பட்ட செயற்பாடாகும் என இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே குறிப்பிட்டார்.

கேள்வி: இந்த விடயங்கள் பெரும் பிரச்சினையை தோற்றுவித்துள்ளன. இதிலிருந்து விடுபடுவது எவ்வாறு?

உதய கம்மன்பில பதில்: கீழ்மட்டத்தில் உள்ள நீதிமன்றங்களின் விழுமியங்களுக்கு பொறுப்பு நீதிச்சேவை ஆணைக்குழுவிடமே உள்ளது.

மேல், உயர் நீதிமன்றங்கள் தொடர்பில் செயற்பட வேண்டியது பாராளுமன்றமே ஆகும். இங்கு நாம் நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்கம் இரண்டுக்குமிடையில் மோதல் ஏற்படுவதை விட பிரதம நீதியரசர் இதில் தலையிட்டு விபரங்களை அறிந்து சிபாரிசுகளை பாராளுமன்றத்துக்கு பெற்றுத் தந்தால் பாராளுமன்றம் அதனடிப்படையில் செயற்பட முடியும்.

பந்துல குணவர்தன பதில்: ஜே.வி.பி. யினர் நிறைவேற்றுப் பிரச்சினையொன்றை செய்து அதன் மூலம் எட்டப்பட்ட குரோத்தனமான தீர்ப்புகள் தான் கீழ்மட்டம் வரை கசிந்துள்ளன. அதில் அன்று அநுரகுமார திசாநாயக்க இருந்தார். இப்போது வசந்த சமரசிங்க சொல்கிறார் நாட்டு பிரச்சினைகள் குறித்துப் பேசுவதில்லை என்பதாக. ஆனால் இதே ஜே.வி.பி யினர் தான் ராஜபக்ஷக்கள் உட்பட அனைவரையும் வேட்டையாட ஒத்துழைப்பு வழங்கினர்.

கேள்வி: தொலைபேசி உரையாடல் ஒலிப்பதிவுத் தொடர்பாக அமைச்சர் டலஸ் அழகப்பெரும பாராளுமன்றத்தில் பேசினார். இலங்கையில் இதன் நிலைமை எப்படியானது?

டலஸ் அழகப் பெரும பதில்: தொலைபேசி உரையாடல்கள் அனுமதியின்றி ஒலிப்பதிவு செய்வது பெரும் குற்றமாகும்.

கேள்வி:பிரதமரே நீங்களும் ரஞ்சனுடன் பேசினீர்களா?

பிரதமர் பதில்: எனது அதிர்ஷ்டம் நான் பேசவில்லை. பிறந்த தினத்தன்று வாழ்த்து தெரிவிப்பது மட்டுமே என்னால் நடந்தது. தவறுதலாக நானும் பேசியிருந்தால் நிச்சயமாக அதனையும் வெளியே விட்டிருப்பார். கடவுள் புண்ணியத்தில் நான் தப்பிவிட்டேன்.

நமது நிருபர்

Fri, 01/10/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை