அரச, தனியார் ஊடகங்களை கட்டுப்படுத்த புதிய சட்டம்

ஆணைக்குழு கூடி ஆராய்வு

தேர்தல் காலத்தில் அரச, தனியார் ஊடகங்களைக் கட்டுப்படுத்தக்கூடிய விதத்தில் புதிய சட்டத்திருத்தங்களை கொண்டுவருவது தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று ஆராய்ந்ததாக ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

தற்போது நடைமுறையில் உள்ள ஒழுக்க விதிகளின் படி அரச ஊடகங்களை மட்டுமே கட்டுப்படுத்தக் கூடியதாக இருப்பதால், தனியார் ஊடகங்களுக்கு அறிவுறுத்தல்களை மட்டுமே வழங்க முடியுமெனவும் அவற்றைக் கட்டுப்படுத்த முடியாதிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

 

ஜனாதிபதி தேர்தலின்போது இது விடயத்தில் நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டதாகவும் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படவேண்டியதன் அவசியத்தையும் நேற்றைய கூட்டத்தில் ஆராயப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

சகல ஊடகங்களும் நேர்மையாகவும், பாரபட்சமின்றியும் நடந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தை தெளிவுபடுத்திய ஆணைக்குழுத் தலைவர் இதற்கமைய சட்டத்தில் முழுமையான திருத்தங்களைச் செய்து ஒழுக்க விதிக் கோவையை தயாரிப்பது குறித்து ஆராயப்பட்டதாகவும் கூறினார்.

சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டதன் பின்னர் அதனைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அங்கீகாரம் பெற்றுக்கொண்டதன் பின்னர் அமுலாக்கக்கூடியதாக இருக்கும் எனவும் அனைத்து ஊடகங்களுக்கும் பொதுவான ஒழுக்க விதிக்கோவையை தயாரிப்பதே ஆணைக்குழுவின் நோக்கமெனவும் அவர் குறிப்பிட்டார்.

அதே சமயம் எதிர்காலத்தில் ஜனாதிபதி தேர்தலின்போதும், ஏனைய தேர்தல்களின் போதும் அவற்றுக்கான கட்டுப்பணத்தை அதிகரிப்பது தொடர்பாகவும் ஆராயப்பட்டது. அத்துடன் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள், சுயாதீன குழுக்கள் பின்பற்றவேண்டிய விதிகளை மறுசீரமைப்பது குறித்தும் கூட்டத்தில் ஆராயப்பட்டது.

எவ்வாறாயினும் ஆணைக்குழுவின் சிபாரிசுகள், எடுக்கப்படும் முடிவுகள் தொடர்பில் பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்படவேண்டும். நாம் எடுக்கும் முடிவுகளை எம்மால் சட்டமாக்க முடியாது.

பாராளுமன்ற அங்கீகாரமின்றி ஆணைக்குழுவால் அமுல்படுத்த ஆணைக்குழுவுக்கு அதிகாரம் கிடையாது எனவும் ஆணைக்குழுத் தலைவர் தெரிவித்தார்.

 

எம். ஏ. எம். நிலாம்

Wed, 12/11/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை