கல்லடி புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா கொடியிறக்கத்துடன் நிறைவு

மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் கல்லடி புனித அந்தோனியார் சிற்றாலயத்தின் வருடாந்த திருவிழா நேற்று (01) ஞாயிற்றுக்கிழமை கொடியிறக்கத்துடன் நிறைவு பெற்றது. பங்குத்தந்தை அருட்பணி சுவைக்கீன் ரொசான் அடிகளார் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை (29) கொடியேற்றத்துடன் இத்திரு விழா ஆரம்பமானது.

இதனைத் தொடர்ந்து இடம் பெற்ற நவநாட் காலங்களில் அருட்தந்தையர்களான அருட்பணி சீ.வீ.அன்னதாஸ், அருட்பணி நிர்மல் சூசைராஜ் (இயேசு சபை) ஆகியோரது சிறப்பு அருளுரைகளுடன் திருப்பலிகள் ஒப்புக் கொடுக்கப்பட்டன. திருவிழா கூட்டுத் திருப்பலியானது நேற்று காலை 7.00 மணிக்கு மட்டக்களப்பு மறைமாநில ஆயர் பேரருட்தந்தை ஜோசப் பொன்னையா ஆண்டகை தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டது. திருவிழா திருப்பலி நிறைவில் பக்தர்களால் அன்னதானம் வழங்கப்பட்டதுடன், நவ நாட்காலங்களில் அந்தோனியாரின் அதிகளவிலான பக்தர்கள் கலந்து கொண்டு புனிதரின் ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொள்ள வருகை தந்தனர். மேலும் இத்திருவிழா கூட்டுத் திருப்பலியில் அயல் பங்கு அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பங்கு மக்கள் மற்றும் பொது நிலையினரென பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.

(கல்லடி குறூப் நிருபர்)

Mon, 12/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை