நாட்டின் முன்னேற்றத்திற்காக சிறுபான்மை கட்சிகள் கைகோர்ப்பது அவசியம்

நாட்டின் முன்னேற்றத்திற்காக சிறுபான்மை கட்சிகள் கைகோர்ப்பது சிறந்தது என முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ நாட்டின் வளர்ச்சியை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கும் வேளை வங்குறோத்து அடைந்துள்ள கட்சிகளுடன் அரசியல் செய்யாமல், பாரிய வளர்ச்சியை நோக்கி சிறந்த முறையில் நாட்டை வழிநடத்திச் செல்லக் கூடிய புதிய அரசாங்கத்துடன் ஏனைய சிறுபான்மை கட்சிகளும் இணைய வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

நேற்று கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் வழிபாடுகளில் கலந்துகொண்ட அமைச்சர் மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளை சந்தித்து ஆசி பெற்ற பின் ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர்,

ஐக்கிய தேசியக் கட்சி 1994 இல் தோற்கடிக்கப்பட்டது. பின்னர் 2015 ல் ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்தனர். அவர்கள் ஆட்சியில் இருந்தபோது நாட்டிற்கு சேவை செய்யவில்லை என்பதே உண்மை. இதனை ஐ. தே க உறுப்பினர்கள் நன்கு அறிவார்கள். மேலும் குறித்த அந்த காலகட்டத்தில்தான் தேசிய பாதுகாப்பு பாதிக்கப்பட்டது. இந்நிலையில் எதிர்காலம் தொடர்பில் நம்பிக்கை இல்லாத ஒரு நிலையே இருந்தது.

கடன் மற்றும் வரிச்சுமைகள் மட்டுமன்றி முதலீட்டாளர்கள் நாட்டை விட்டு வெளியேறினர்.

வெட்டினாலும் பச்சை நிறத்திலேயே இரத்தம் ஓடும் என்று உறுதியாக இருந்தவர்கள் இன்று ஐ.தே க .வில் எந்த நன்மையும் இல்லை என்பதை உணர்ந்துள்ளனர்.

ஏராளமான மக்கள் கட்சியை விட்டு வெளியேறி அடுத்த பொதுத் தேர்தலில் எங்களுடன் இணைந்துகொள்ள தீர்மானித்துள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தலில் 55 இலட்சம் வாக்குகளைப் பெற்ற ஐக்கிய தேசியக் கட்சிக்கு அடுத்த பொதுத் தேர்தலில் குறைந்தது 40 இலட்சம் வாக்குகள் கிடைக்கும் என்று நம்புவதும் கடினம்.

ஆகவே அடுத்த பாராளுமன்ற பொதுத் தேர்தலில் பாரிய வெற்றியைப் பெற்று நாம் பாராளுமன்றத்தை அமைப்போம்.

தேசிய பாதுகாப்பு ஏற்கனவே உறுதிசெய்யப்பட்ட நிலையில் முதலீடு மற்றும் சுற்றுலாத்துறையை மேம்படுத்த நாம் எண்ணியுள்ளோம். நுரைச்சோலை மின் நிலையம் மற்றும் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை ஆகியவை நாட்டில்ஆரம்பிக்கப்பட்ட மிகவும் இலாபகரமான திட்டங்களாகும்.

ஐ.தே க . சமீபத்தில் கண்டி பழைய சிறை வளாகத்தை புதுப்பித்திருந்தாலும் அது சாதகமானதாகத் தெரியவில்லை. கண்டி கடந்த ஐந்து ஆண்டுகளில் எந்தவொரு சாதகமான வளர்ச்சியையும் அனுபவிக்கவில்லை

பழைய போகம்பர சிறை வளாகத்தை அதிக உற்பத்தி நோக்கத்திற்காக பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இது குறித்து அடுத்த வாரத்தில் பீடாதிபதிகளுக்கு அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

எம்.ஏ.அமீனுல்லா

Tue, 12/03/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை