சவூதி இன்றி மலேசியாவில் இன்று இஸ்லாமிய மாநாடு

முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட நாடுகளின் உச்சு மாநாடு ஒன்று மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இன்று ஆரம்பமாகவுள்ளது. இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்புக்கு புறம்பாக நடைபெறும் இந்த மாநாட்டில் இஸ்லாமிய எதிர்ப்புப் போக்கு மற்றும் வறுமை போன்ற விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளது.  

மலேசிய பிரதமர் மஹதிர் மொஹமட் தலைமையில் நடைபெறும் மாநாட்டில் ஈரான் ஜனாதிபதி ஹசன் ரூஹானி, துருக்கி ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துவான் மற்றும் கட்டார் எமீர் ஷெய்க் தமிம் ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர்.  

இதில் 52நாடுகளின் 250வெளிநாட்டு பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்பதாக ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இவர்களில் அரச அதிகாரிகள், அறிஞர்கள் மற்றும் பல்வேறு அரச சார்பற்ற நிறுவனங்களின் தலைவர்களும் உள்ளடங்குகின்றனர்.  

எனினும் இந்தோனேசியா, சவூதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் தலைவர்கள் இதில் பங்கேற்காதது குறிப்பிடத்தக்கதாகும்.  

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சவூதி அரேபியா விஜயத்திற்கு பின் இந்த மாநாட்டில் பங்கேற்பதை ரத்துச் செய்திருப்பதாக அந்நாட்டின் செய்திகள் கூறுகின்றன. தம்மால் வருகைதர முடியாதது குறித்து மஹதிரிடம் தொலைபேசியில் இம்ரான் கான் வருத்தத்தை தெரிவித்ததாக கோலாலம்பூரை தளமாகக் கொண்ட இணைதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.  

இதனிடையே முஸ்லிம் உலகில் பிளவு ஏற்படும் ஆபத்து இருப்பதால் இந்த மாநாட்டில் இருந்து விலகியதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷாஹ் மஹ்மூத் குரைஷி குறிப்பட்டுள்ளார்.  

முன்னதாக இந்த மாநாட்டில் பங்கேற்பதற்கு பாகிஸ்தான் எடுத்த முடிவுக்கு அதன் வளைகுடா கூட்டாளிகளான சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் அதிருப்தி வெளியிட்டிருந்தன.  

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய குரைஷி, பிரதம் இம்ரான் கானும் தாமும் இந்த மாநாட்டில் பங்கேற்கவில்லை என்று தெரிவித்தார்.  

சவூதி அரேபியா தரப்பில் இருந்து கொடுக்கப்பட்ட அழுத்தமே பாகிஸ்தான் இந்த மாநாட்டில் பங்கேற்காததற்கு காரணம் என பாகிஸ்தானைச் சேர்ந்த ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

ஆனால் இது உண்மையல்ல என்று மலேசியப் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். 

“இதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. அவர் (இம்ரான் கான்) வராததற்கு வேறு காரணங்கள் இருக்கலாம்.

எனவே ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில் உண்மை இல்லை” என்றார். 

கோலாலம்பூரில் நடைபெறும் ‘கே.எல் உச்சி மாநாடு 2019’ இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்புக்கு மாற்றாக உருவாக்கப்பட்டுள்ள புதிய ஏற்பாடு அல்ல என்றும், இது தொடர்பாக செளதி அரேபிய மன்னர் சல்மான் அப்துல் அசிஸ் அல் சவுத்திடம் தாம் விளக்கமளித்து இருப்பதாகவும் மலேசிய பிரதமர் மஹதிர் தெரிவித்துள்ளார். 

உலகெங்கும் உள்ள முஸ்லிம்கள் தொடர்பில் தீர்மானத்தை எடுக்கும் மஹதிரின் முயற்சியாகவே இந்நிகழ்வு இடம்பெறுவதாக உச்சி மாநாட்டின் செயலாளர் நாயகம் சம்சுதீன் ஒஸ்மான் குறிப்பிட்டுள்ளார்.  

இந்த மாநாட்டில் எத்தகைய பிரச்சினைகள், விவகாரங்கள் குறித்துப் பேசப்படும் என்பது தெரிவிக்கப்படவில்லை. 

இருப்பினும் சந்திப்பில் காஷ்மீர், மத்திய கிழக்கு ஆகியவற்றில் நிலவும் சிக்கல்கள், சிரியா, யெமன் உள்நாட்டுப் பூசல்கள், மியன்மாரின் ரொஹிங்கியா விவகாரம் முதலியவை குறித்துப் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Thu, 12/19/2019 - 14:37


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை