பிரசாரத்திற்கு இராணுவ தளபதியின் படத்தை பயன்படுத்திய குற்றச்சாட்டு

கோட்டாபயவுக்கு எதிராக தேர்தல்  ஆணைக்குழுவில் முறைப்பாடு

பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் பிரசார விளம்பரத்திற்காக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாவின் புகைப்படத்தையும் கருத்துக்களையும் உள்ளடக்கியது தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்துமாறு கோரி தேர்தல் ஆணைக்குழுவில் இன்று(14) முறைப்பாடு செய்வதாக ஐ.தே.க முன்னாள் செயலாளரும் தேர்தல் நடவடிக்கை பிரிவு பிரதானியுமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

கடமையில் இருக்கும் இராணுவத் தளபதியின் படத்தையும் கருத்துக்களையும் தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்துவது தேர்தல் சட்டங்களுக்கு முரணானது என்பதால் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஆணைக்குழுவை கோரவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் எழுத்து மூலம் முறையிட உள்ளதாகவும் அவர் கூறினார்.

வொக்ஸல் வீதியில் அமைந்துள்ள சஜித் பிரேமதாஸவின் தேர்தல் நடவடிக்கை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக மாநாட்டிலேயே அவர் இதனைத தெரிவித்தார்.

கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் பிரசார பணிகள் கீழ் மட்டத்திற்கு குறைந்துள்ளதாக தெரிவித்த அவர், வங்குரோத்து நிலையிலிருந்து மீள்வதற்காக இராணுவத் தளபதியின் படத்தையும்

கருத்துக்களையும் தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்துவதாகவும் கூறினார். இது கீழ்தரமான மற்றும் சட்டவிரோதமான செயல் என்றும் கூறிய அவர் சொந்த விருப்பின் பேரில் தமது படத்தையும் கருத்துக்களையும் வழங்கினாரா என்பது தொடர்பில் இராணு தளபதி பகிரங்கமாக விளக்கமளிக்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றிக்காக பல பத்திரிகைகளில் விளம்பரங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் முன்னாள் கடற்படை இராணுவ தளபதிகளினதும் தற்போதைய இராணுவத் தளபதிகளினதும் கருத்துகள் இணைக்கப்பட்டுள்ளன. தற்போதைய இராணுவ தளபதியின் படத்தையும் கருத்துக்களையும் இணைத்திருப்பது பாரதூரமான தவறாகும். அதிகாரத்திற்கு வருவதற்காக பாதுகாப்பு இராணுவ பிரதானியை அரசியலுக்காக பயன்படுத்தியிருப்பதை அனுமதிக்க முடியாது. படை வீரர்களின் கௌரவத்தை சீரழிக்கும் கீழ்த்தரமான விளம்பரங்களுக்காக அவர்களை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு தலைவரும் ஜனாதிபதியும் தலையீடு செய்து தேவையான நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.(பா)

 

 

Mon, 10/14/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை