எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர் அஸ்வர்

நினைவு தினத்தில் அமைச்சர் ஹக்கீம்

பல் பரிமாணங்கள் கொண்ட ஆளுமையுள்ள தனி மனிதராக மர்ஹூம் ஏ.எச்.எம். அஸ்வரை மட்டுமே காணமுடியும். அவர் பல்வேறுபட்ட பாத்திரங்களில் தனியொரு மனிதனாக நின்று சாதித்து காட்டினார் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

மறைந்த ஏ.எச்.எம். அஸ்வரின் இரண்டாவது நினைவேந்தல் நிகழ்வு நேற்று முன்தினம் கொழும்பு வை.எம்.எம்.ஏ. மண்டபத்தில் நடைபெற்றபோது, அதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து உரைநிகழ்த்திய அமைச்சர் மேலும் கூறியதாவது;

பாராளுமன்ற உறுப்பினராகவும் இராஜாங்க அமைச்சராகவும் பணியாற்றியிருக்கிறார். அது மட்டுமன்றி, பல்வேறு சமூக அமைப்புகளில் இயங்குநிலை உறுப்பினராக இருந்து பாரிய சமூக பணிகளை புரிந்துள்ளார். நாட்டின் ஜனாதிபதியாகட்டும் அல்லது பிரதமராகட்டும் அவர்களை பயன்படுத்தி சமூகத்திற்கு ஆகவேண்டிய நன்மைகளை பெற்றுக்கொடுப்பதில் அவர் முன்னிலை வகித்தார்.

அவரின் இறுதிக்கால கட்டத்தில் குறிப்பாக இரண்டு வருடங்களாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவோடு ஒரு நெருக்கமான உறவை பேணினார். அக்காலம் முஸ்லிம்களை பொறுத்தவரை பல்வேறு நெருக்கடிகள் நிறைந்த காலகட்டமாக இருந்தது. அக்காலத்தில் நிகழ்ந்த நெருக்கடிகளை பல்வேறு சமூக மட்டங்களில் இருந்தவர்களும் எதிர்மறையாக அணுகியபோதிலும், அஸ்வர் அவர்கள் மஹிந்த ராஜபக்ஷவோடு கூடவிருந்து பெரும் ஆபத்துகளிலிருந்து சமூகத்தை பாதுகாத்தார்.

அவருடன் தொடர்பு கொண்டிருந்த எல்லோருமே கட்சி பேதங்களுக்கு அப்பால் அவரை மிகவும் நேசித்தனர். இலங்கையில் தலைசிறந்த முஸ்லிம் தலைவர்களாக கருதப்பட்ட எம்.எச். முஹம்மட், பாக்கீர் மாக்கார், ஏ.சி.எஸ். ஹமீட் உட்பட அனைவருடனும் அஸ்வருக்கு நெருக்கமான தொடர்பிருந்தது.

அத்தகையதொரு ஆளுமை நிறைந்த சமூகத் தலைமையை நாம் இழந்திருக்கிறோம். ஆட்சிபீடத்தோடு தனக்கிருந்த நெருக்கத்தை ஆயிரக்கணக்கான தனிநபர்களுக்கு உதவியை பெற்றுக் கொடுத்துள்ளார். ஆனால், அந்த மிகப்பெரிய ஆளுமை தனக்கென்று எதனையும் சேமித்து வைக்கவில்லை என்பதுதான் ஆச்சரியம். ஆனால் உண்மையும் அதுவாகும்.

மும்மொழிகளிலும் சரளமாக உரையாடுவது அவருக்கு கிடைத்த பாக்கியம். பாராளுமன்றத்தில் பணிபுரியும் ஹன்சார்ட் மொழிபெயர்ப்பாளர்களை பொறுத்தவரை, அஸ்வர் ஒரு சிம்ம சொப்பனமாக விளங்கியுள்ளார்.

ஒரு மொழியில் பேசிக்கொண்டிருக்கும்போது திடீரென இன்னொரு மொழிக்குள் சென்றுவிடுவார். இவ்வாறான அவரது உரைகளை பாராளுமன்ற ஹன்சார்ட்களைப் பார்த்தால் விளங்கிக்கொள்ளலாம்.

அவருடைய மறைவு எமது முஸ்லிம் சமூகமே முகம்கொடுக்க நேரிட்ட இழப்பாகும். ஆரவாரமில்லாமல் சாதித்த அரசியல்வாதி என்று அவரை இனம்காணலாம். சாதாரண அரசியல்வாதியைப்போல் நாங்கள் அதைச் செய்தோம், இதைச் செய்தோம் என்று பேசித் திரியாமல், முக்கியமாக மூன்றாம் நபருக்கு எட்டப்படாமல் காரியங்களை செய்துமுடிப்பார்.

எம்.ஏ.எம்.நிலாம்

Thu, 10/03/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை