இராணுவத்தை அடிமைத்தனமாக நடத்தியவர்களே இன்று அவர்கள் பற்றி மேடைகளில் மெச்சுகிறார்கள்

இராணுவத்தினரை அடிமைத்தனமாகவும், குடும்பத்தின் தேவைகளுக்கும், மனைவிமாரின் வேலைக்காரர்களாகவும் வைத்திருந்தவர்கள் இன்று காலை முதல் மாலை வரை இராணுவத்தினரை பற்றி மேடை மேடையாக பேசிவருவதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

2020ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்கான இடைக்கால கணக்கு வாக்கெடுப்பு அறிக்கையை பாராளுமன்றில் சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் கூறுகையில்,

தேர்தல் மேடைகளில் இராணுவத்தினர் இராணுவத்தினர் என்றே ராஜபக்‌ஷ தரப்பினர் பேசிவருகின்றனர். இவர்கள் இராணுவத்துக்காக என்ன செய்தார்களென நன்கு தெரியும். இராணுவத்தினர் சம்பளத்துக்காகவும், கொடுப்பனவு அதிகரிப்புக்காகவும் பலமுறை இவர்களிடம் கோரிக்கை விடுத்தனர். ஆறு கடிதங்கள் வரை அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவிடம் கையளித்திருந்தனர். ஆனால், ஒருமுறை கூட இராணுவத்தினரின் சம்பள அதிகரிப்புத் தொடர்பில் நடவடிக்கை எடுக்கவில்லை.

இராணுவத்தினருக்கு 120 சதவீதம் சம்பளம் அதிகரிக்கப்படுமென கோட்டாபய கூறியிருந்த செய்திகள் பத்திரிகைகளில் இன்றும் ஆதாரமாகவுள்ளன. ஆனால், இராணுவத்தினரை அடிமைத்தனமாகவும், வீதிகளை சுத்தம் செய்யவும், குடும்பத் தேவைகளுக்கும், பஸில் ராஜபக்‌ஷவின் மனைவிக்குச் சேவை செய்யவுமே பயன்படுத்தியிருந்தனர். இதுதான் இவர்கள் இராணுவத்தினருக்குச் செய்த சேவை. நாம் அவ்வாறில்லை அவர்களுக்கு கௌரவத்தையும், உரிய அபிமானத்தையும் கொடுத்துள்ளோம்.

1983ஆம் ஆண்டு ஜே.ஆர். ஜெயவர்தன இராணுவத்தினருக்கு சிறந்த சம்பள அதிகரிப்பை வழங்கியிருந்தார். அதன் பின்னர் ரணில் விக்கிரமசிங்க அரசுதான் இராணுவத்தினருக்கு உரிய சேவையையும் எதிர்ப்பார்ப்பையும் நிறைவேற்றியுள்ளது. யுத்தத்தை நாம் தான் வெற்றிக்கொண்டோமென நாடுமுழுவதும் கூறினர். தற்போது இராணுவத்தினரை நாம் வழிநடத்தவில்லையென கூறினர். அன்று இராணுவத்தை வழிநடத்திய பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவை இராஜகிரிய வீதியில் இழுத்துச் சென்று சிறையிலடைத்தனர். ஆகவே, இராணுவத்தினர் மீது யார் அக்கறையுடன் செயற்பட்டுள்ளனரென தெரிந்துக்கொள்ள முடியும் என்றார்.

ஹம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

Fri, 10/25/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை