வாக்காளர் அட்டைகளை நவ. 09முன் விநியோகிக்க பணிப்பு

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்கான வாக்காளர் அட்டைகள் இன்று வெள்ளிக்கிழமை தேர்தல்கள் ஆணைக்குழுவினால் தபால் மாஅதிபரிடம் கையளிக்கப்படவிருப்பதாக தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

2018ஆம் ஆண்டின் வாக்காளர் இடாப்புக்கு அமைய வாக்களிக்கத் தகுதி பெற்ற அனைவருக்கும் இந்த வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படவுள்ளன. வாக்காளர் அட்டைகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் வாக்காளரின் முகவரிக்கு நேரடியாக இந்த அட்டைகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எந்தவொரு வாக்காளரது அட்டையும் பிரிதொருவரிடம் கையளிக்கப்படக்கூடாது என தேர்தல் ஆணைக்குழு தலைவர் தபால் மா அதிபரிடம் வலியுறுத்தினார்.

பிரதம அஞ்சல் நிலையத்தில் ஒப்படைக்கப்படும் வாக்காளர் அட்டைகள் முதலில் மாவட்டத்துக்கு தரம் பிரிக்கப்பட்டு அந்தந்த மாவட்டங்களில் பிரதி அஞ்சல் மாஅதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.

மாவட்ட பிரதம அஞ்சல் அலுவலகத்திலிருந்து நாளை சனிக்கிழமை முதல் விநியோகத்தை ஆரம்பிக்கும் வகையில் அனைத்து தபாலகங்களுக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளன.

வாக்காளர் அட்டைகளை விரைவாக விநியோகிக்கும் வகையில் நவம்பர் மாதம் மூன்றாம் திகதி ஞாயிற்றுக்கிழமை விசேட தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 9ஆம் திகதி வாக்காளர் அட்டை விநியோகப்பணி முடிவுக்குவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பின்னர் விநியோகிக்கப்படாத வாக்காளர் அட்டைகள் அந்தந்த பிரதேச தபாலகங்களில் தபால் அதிபர்களின் பொறுப்பில் வைக்கப்படும். நவம்பர் 15ஆம் திகதிக்கு முன்னர் அந்த வாக்காளர் அட்டைகளுக்குரியவர்கள் தமது அடையாளத்தை உறுதிப்படுத்திப் பெற்றுக்கொள்ள முடியும்.

வாக்காளர் அட்டைகளை கைமாற்ற வேண்டாம் என மக்களிடம் கேட்டிருக்கும் ஆணைக்குழுத் தலைவர் பிறிதொருவரின் வாக்காளர் அட்டையை தேர்தல் தினத்தில் யாராவது வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனச் சுட்டிக்காட்டினார்.

வாக்களிப்பின் போது முறைகேடுகளைத் தவிர்க்கும் பொருட்டு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

2018ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பில் பெயர் பதியப்பெற்ற ஒருவருக்கு வாக்காளர் அட்டை கிடைக்கப்பெறாது போனாலும் அவரால் வாக்களிக்க முடியும். தனது அடையாளத்தை உறுதிப்படுத்தி வாக்காளர் இடாப்பில் பெயர் இருக்குமானால் அந்த வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிப்பதற்கு அவர் வாக்குச் சீட்டைப் பெற்றுக்கொள்ள முடியும்.

வாக்காளர் அட்டை கிடைக்கவில்லை என்பதற்காக அவருக்கு வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட மாட்டாது என்றும் ஆணைக்குழுத் தலைவர் குறிப்பிட்டார்.

எம். ஏ. எம். நிலாம்

Fri, 10/25/2019 - 08:41


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை