முக்கிய வீரர்கள் இன்றி பாகிஸ்தான் செல்லும் இலங்கை அணி

இலங்கை அணியின் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்திலிருந்து பாதுகாப்பு காரணங்களுக்காக 10 மூத்த வீரர்கள் விலகிக் கொண்டிருப்பதாக இலங்கை கிரிக்கெட் (09) அறிவித்தது.

இலங்கை கிரிக்கெட் காரியாலயத்தில் இடம்பெற்ற சந்திப்பில் பாகிஸ்தானின் பாதுகாப்பு நிலைமை மற்றும் இலங்கை அணியினருக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை வழங்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து SLC இன் தலைமை பாதுகாப்பு ஆலோசகரான இலங்கை விமானப்படையின் முன்னாள் தளபதி ரொஷான் குணத்திலக்க வீரர்களுக்கு விளக்கினார். எனினும் இந்த சந்திப்புக்கு பின்னர் பாகிஸ்தானுக்கான இரண்டு வார சுற்றுப்பயணத்தில் பங்கேற்காமல் இருப்பதற்கு 10 வீரர்கள் உத்தியோகபூர்வமாக தீர்மானித்தனர்.

2009 ஆம் ஆண்டு பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் இலங்கை அணி வீரர்கள் சென்ற பஸ் வண்டி மீது துப்பாக்கிதாரிகள் நடத்திய தாக்குதலில் ஆறு வீரர்கள் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் ஆறு பாகிஸ்தான் பொலிஸார் மற்றும் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவமே இலங்கை வீரர்கள் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை புறக்கணிப்பதற்கு காரணமாகும்.

2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் முதல் முறையாகவே ஒருநாள் மற்றும் டி20 சர்வதேச போட்டிகளைக் கொண்ட இரண்டு வாரங்களுக்கு மேற்பட்ட சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை பாகிஸ்தான் ஏற்பாடு செய்கிறது.

இதற்கு முன்னர் 2017 ஒக்டோபரில் இரண்டாம் நிலை இலங்கை அணி ஒன்று பாகிஸ்தானில் ஒரே ஒரு டி20 போட்டியில் விளையாடியதோடு கடந்த இரண்டு ஆண்டுகளில் ஐ.சி.சி. உலக பதினொருவர் அணி மற்றும் மேற்கிந்திய தீவுகளும் பாகிஸ்தானில் குறுகிய கால டி20 சர்வதேச தொடர்களில் விளையாடின.

எதிர்வரும் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் பின்வரும் வீரர்கள் விலகி இருப்பதற்கு இலங்கை அணி தேர்வுக் குழு தலைவர் அசந்த டி மெல் பச்சைக்கொடி காட்டியுள்ளார்.

நிரோஷன் திக்வெல்ல

குசல் ஜனித் பெரேரா

தனஞ்சய டி சில்வா

திசர பெரேரா

அகில தனன்ஜய

லசித் மாலிங்க

அஞ்செலோ மெத்திவ்ஸ்

சுரங்க லக்மால்

தினேஷ் சந்திமால்

திமுத் கருணாரத்ன

 

இதனிடையே நியூசிலாந்து ரி 20 தொடரில் உபாதைக்கு உள்ளான குசல் மெண்டிஸ் இந்த சுற்றுப்பயணத்திற்கான தேர்வில் சேர்க்கப்படவில்லை.

எதிர்வரும் செப்டெம்பர் 27 ஆம் திகதி ஆரம்பமாகும் மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் சர்வதேச போட்டிகள் கராச்சி சர்வதேச அரங்கில் நடைபெறவிருப்பதோடு மூன்று டி20 சர்வதேச போட்டிகளும் லாஹூர், கடாபி அரங்கில் நடைபெறவுள்ளன. ரி20 தொடரின் முதல் போட்டி ஒக்டோபர் 5 ஆம் திகதி நடைபெறும்.

போட்டி அட்டவணை

1ஆவது ஒருநாள்

செப்டெம்பர் 27, கராச்சி

2ஆவது ஒருநாள்

செப்டெம்பர் 29, கராச்சி

3ஆவது ஒருநாள்

ஒக்டோபர் 02, கராச்சி

1ஆவது ரி 20

ஒக்டோபர் 05, லாஹூர்

2ஆவது ரி 20

ஒக்டோபர் 07, லாஹூர்

3ஆவது ரி 20

ஒக்டோபர் 09, லாஹூர்

Wed, 09/11/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை