மக்களின் ஒரு சத திருடின்றி நல்லாட்சி நடத்தப்படும்

முன்னாள் ஜனாதிபதிகளின்  திருட்டுக்களையும் ஒப்புவிப்போம்

இதுவரைகாலமும் எமது நாட்டைஆட்சிசெய்த சகல ஜனாதிபதிகளதும் திருட்டுச் செயல்களையும் ஒப்புவிக்கத், தான் தயாராக இருப்பதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.  

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரான அநுரகுமார திஸாநாயக்க தங்காலை நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே  இவ்வாறு தெரிவித்தார்.  

தொடர்ந்து உரையாற்றிய அவர், நாம் எமது ஆட்சியின் போது பொது மக்களின் பணத்தை ஒரு சதமேனும் திருடாமல் மக்கள் ஆட்சியை முன்னெடுப்போம். எமது நாட்டை இதுவரைஆட்சி செய்த சகல ஜனாதிபதிகளும் மக்களின் பணத்தை திருடியுள்ளனர்.. அவர்கள் இவ்வாறு திருடவில்லையானால், யாராவது முன் வந்து நாம் திருடவில்லையென மக்கள் முன் வந்து கூறட்டும். இவர்களது திருட்டுத்தனங்களை ஒப்புவிப்பதற்கு நாம் தயாராகவுள்ளோம்.  நாம் பொதுமக்களின் ஒரு சதத்தையா வது திருடாத ஆட்சியாளரை  உருவாக்குவோமென வாக்குறுதியளிக் கிறேன்.  

தற்போதைய பாராளுமன்றத்தில் நாம் இருபது வருடகாலமாக இருந்துள்ளோம். இக்காலப் பகுதியில் எமதுநாட்டு மக்களின் பணத்திலிருந்து ஒரு சதத்தையேனும் திருடவில்லை என்ற உறுதியை வழங்கியிருக்கிறோம். ஜனாதிபதிகள் இந்நாட்டு மக்களின் கோடிக்கணக்கான ரூபாய்களை வீணடிக்கின்றனர். மாளிகைகளை பராமரிப்பதற்காக, ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளைப் பராமரிப்பதற்காக, தற்போதுள்ள ஜனாதிபதிகளைப் பராமரிப்பதற்காக, ஒருசில வருடங்களில் ஜனாதிபதியின் செலவுக்கென பத்து கோடிக்குமேல் செலவாகின்றது. ஜனாதிபதியின் செலவுகளையும் குறைத்து இந்தபணத்தையும் மக்கள் நலத் திட்டங்களுக்காக செலவு செய்வோம். இதுவரைகாலமும் இருந்துவந்த முறையினை மாற்றியமைத்து நாட்டை கட்டியெழுப்புவோம்.   நாட்டினைக் கட்டியெழுப்பும் முதலாவது படி வீட்டிலிருந்தே ஆரம்பிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஹம்பாந்தோட்டை குறூப் நிருபர்  

Wed, 09/25/2019 - 10:36


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை