ஜனாதிபதி தேர்தலில் சமூகம் சார்ந்ததாகவே முடிவுகளை எடுக்க வேண்டும்

அபிவிருத்தியை விட நிம்மதியான வாழ்க்கையையே இன்று முஸ்லிம் சமூகம் எதிர்பார்க்கின்றது. சீர்குலைந்துள்ள இயல்பு வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கதான தருணமாகவே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை நாங்கள் எதிர்கொள்ள வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். 

குருநாகல் மாவட்டத்தில் காபட் வீதியாக அபிவிருத்தி செய்யப்பட்ட பன்னவ சந்தி – லோலன்வௌ வரையிலான வீதி மற்றும் பன்னவ கிராமிய குடிநீர் திட்டம் ஆகியவற்றை மக்கள் பாவனைக்காக சனிக்கிழமை (28) திறந்துவைத்த பின்னர் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது;  எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எங்களது தெரிவு தொடர்பில் குழப்பங்கள் இருந்தால், எமது தீர்மானம் எந்த விவகாரங்களை அடிப்படையாகக் கொண்டது என்று ஆராயவேண்டும். அந்த தெரிவு முஸ்லிம்களைப் பொறுத்தவரை தனிநபர்களைப் பொறுத்த விடயமல்ல. சமூகம் சார்ந்த முடிவுகளையே நாங்கள் எடுத்தாக வேண்டியிருக்கிறது.

முஸ்லிம் சமூகத்தை நாட்டிலுள்ள ஏனைய சமூகங்கள் அச்சத்தோடும் சந்தேகத்தோடும் பார்க்கின்ற ஒரு நிலவரத்தை உருவாக்குவதற்கு சில சக்திகள் திட்டமிட்டு செயற்பட்டன. இதன் விளைவாக நாங்கள் பாரிய நெருக்கடிகளுக்கு முகம்கொடுக்க நேரிட்டது. இனியும் இந்தமாதிரியான நெருக்கடிகள் வரமாட்டாது என்பதற்கு எங்களுக்கு எவ்வித உத்தரவாதங்களும் இல்லை. இப்படியானதொரு சூழலில்தான் நாங்கள் தீர்மானமிக்க இன்னுமொரு தேர்தலுக்கு முகம்கொடுக்கவுள்ளோம்.

ஏப்ரல் 21ஆம் திகதி நடந்த பேராபத்துதான் எங்களது மனதில் நிலைத்திருக்கும். அதேமாதிரியான ஒரு பயங்கரவாதத்தையே ஒக்டோபர் 26ஆம் திகதி இந்த நாட்டில் நடத்தினார்கள். அதுவும் ஒருவிதமான பயங்கரவாதம்தான்.

அதில் உயிர்கள் கொலை செய்யப்படுவது ஒருபுறமிருக்க, நாட்டின் ஜனநாயகம் கொலை செய்யப்பட்டது. இப்படியான அட்டகாசங்கள் நடந்ததை நாங்கள் மறந்துவிட முடியாது.

நான் 25வருடங்களாக பாராளுமன்றத்தில் இருக்கின்றேன். சட்டவிரோதமாக ஆட்சியை கைப்பற்ற நினைத்தவர்கள் நடத்திய அட்டகாசத்தை நான் வேறெந்த நாளும் கண்டதில்லை. பாராளுமன்றத்தில் அடிக்கடி ஏதாவது சர்ச்சைகள் நடந்தாலும், இப்படியொரு ஜனநாயக மீறல் அட்டூழியம் நிகழ்ந்ததை யாரும் பார்க்கவில்லை.

தற்போதைய அரசாங்கத்திலும் எங்களுக்கு பெரியதொரு நிம்மதி இருக்கவில்லை என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அளுத்கம, பேருவளை சம்பவங்களை காரணம்காட்டி அரசாங்கத்தை மாற்றினோம். ஆனால், திகன, கண்டி, அம்பாறை, குருநாகல், புத்தளம் போன்ற இடங்களில் அடி வாங்கினோம். இந்த அரசாங்கம் தொடர்பில் திருப்திப்படுவதற்கு எங்களுக்கு எந்த விடயங்களும் இல்லை என்றார்.

Mon, 09/30/2019 - 08:36


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை