பாதுகாப்பு 100 வீதம் உறுதியென இப்போதே கூறமுடியாது

ஷம்ஸ் பாஹிம், லக்‌ஷ்மி பரசுராமன்

பயங்கரவாதம் தடுக்கப்பட்டு பாதுகாப்பு நூறு வீதம் உறுதியாகியுள்ளதாக இப்பொழுதே கூற முடியாது. சகலரும் தேசியப் பாதுகாப்பு குறித்து சிந்தித்து செயற்படுகிறார்களா என்பதில் சிக்கல் உள்ளது என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்தார்.

கிழக்கு கட்டளையிடும் தளபதியாக செயற்பட்ட லால் பெரேரா, 2017 இல் சஹ்ரானை அழைத்து எச்சரித்துள்ளதாக அறிவோம் எனவும் அவர் கூறினார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தும் விசேட பாராளுமன்ற தெரிவுக்குழுவில் இரண்டாவது தடவையாகவும் சாட்சியமளித்த அவர் மேலும் கூறியதாவது,

சட்டம், ஒழுங்கு தொடர்பில் இராணுவத்திற்கு அதிகாரம் இல்லை. ஆனால், அவசரகாலச் சட்டத்தின் கீழ் எமக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி செயற்பட்டு வருகிறோம். குறுகிய காலத்தில் பலரை கைது செய்தோம்.சிலர் தப்பிச் சென்றுள்ளனர். நிலைமையை பெருமளவு கட்டுப்படுத்தியுள்ளோம். தாக்குதல் தொடர்பான தகவல் கிடைத்தும் இராணுவ புலனாய்வுப் பிரிவை அறிவூட்டாதது பெரும் கவலை அளிக்கிறது.

ஏப்ரல் 20 அல்லது 21 ஆம் திகதி காலையில் இராணுவ புலனாய்வுப் பிரதானிக்கு தகவல் கிடைத்ததா? என உள்ளக விசாரணை நடத்தினேன். எமக்கு முன்கூட்டி தகவல் கிடைத்திருந்தால் தாக்குதலை முறியடிக்க பங்களிப்பு செய்திருக்க முடியும்.

அவசர நிலைமைகளின் ​போது ஜனாதிபதியுடன் நேரடியாக அறிவிக்கக் கூடிய நிலைமை இருக்க வேண்டும். பாதுகாப்பு சபை கூட்டத்தில் கலந்து கொள்ளும் சிலர் பாதியில் செல்வதுண்டு. தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் எதிரணி எம்.பிகள் ஏன் பங்குபற்றுகின்றனர் என்று தெரியாது.அதற்கு ஏற்ப நாம் அங்கு கலந்துரையாடுவோம். எதிர்க்கட்சி எம்.பிகள் பங்கேற்பது உகந்ததல்ல.ஒரு தடவை கர்தினாலும் வந்திருந்தார்.எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என அறிவூட்டப்பட்டது.

கிழக்கு கட்டளையிடும் தளபதியாக இருந்த லால் பெரேரா, சஹ்ரானை அழைத்து எச்சரித்தது பற்றி அறிவோம். 2017 இல் இவ்வாறு எச்சரிக்கை செய்துள்ளார். வெடிபொருட்கள் விநியோகிப்பது தொடர்பில் கட்டுப்பாடு விதிக்க வேண்டும்.பெறப்படும் வெடிபொருட்கள் எதற்கு பயன்படுத்தப்பட்டன என்பது குறித்தும் கவனம் செலுத்த பொறிமுறை ஒன்றை கொண்டுவர வேண்டும்.எதிர்காலத்தில் இவ்வாறான தாக்குதல்கள் நடைபெறுவதை தடுக்க சகல பிரிவுகளிலும் முன்னேற்றகரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.புலனாய்வு பிரிவுகளும் ஒன்றிணைந்து செயற்படும் நிலை உருவாகியுள்ளது என்றும் கூறினார். முழுமையான சாட்சியம் 2 ஆம் பக்கம்

Thu, 08/01/2019 - 06:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை