பொசன் உற்சவத்தை சிறப்பாக கொண்டாட அரசாங்கம் ஏற்பாடு

அலங்காரப் பந்தல்கள் அமைக்க அனுமதி

சமய வழிபாடுகளுக்கு முன்னுரிமையளித்து இம்முறை பொசன் பண்டிகையை விமரிசையாகக் கொண்டாடுவதற்கு அரசாங்கம் பூரண அனுசரணையை வழங்குமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போது இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த பிரதமர், நாட்டின் அனைத்துப் பிரதேசங்களிலும் பொசன் பண்டிகையை விமரிசையாகக் கொண்டாடுவதற்கான சகல ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அநுராதபுரத்தைக் கேந்திரமாகக்

கொண்டு கொண்டாடப்படும் பொசன் பண்டிகை நிகழ்வுகளில் 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட பௌத்த மக்கள் கலந்துகொள்வார்களென எதிர்பார்ப்பதாகவும் அவர்களுக்கான சகல வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்கப்படுமென்றும் இதன்போது பிரதமர் தெரிவித்தார்.

வெசாக் பண்டிகையை முன்னிட்டு வழமைபோன்று அலங்காரப் பந்தல்கள் அனைத்தும் பாதுகாப்பு காரணங்களுக்காக இடம்பெறவில்லை.

எனினும் பொசன் உற்சவத்தை முன்னிட்டு அனைத்து அலங்காரப் பந்தல்களையும் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் பிரதமர் இதன்போது தெரிவித்தார்.

இதேவேளை, பொசன் பண்டிகையையொட்டி நாட்டின் அனைத்துப் பிரதேசங்களிலும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் பொலிஸார் உள்ளிட்ட பதுகாப்புப் படையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவரென்றும் பிரதமர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட உள்துறை மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன நாட்டின் அனைத்து மாவட்டச் செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்கள் ஆகியவற்றில் ஜூன் 13 ஆம் திகதி இரவு விசேட மத வழிபாடுகள் இடம்பெறுமென்றும் அதனையடுத்து மறுநாள் பொசன் பண்டிகை நிகழ்வுகள் இடம்பெறுமென்றும் தெரிவித்தார்.

ஜூன் 10 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை நாட்டின் அனைத்து அரச கட்டடங்களிலும் பொசன் பண்டிகையை முன்னிட்டு அலங்கரிக்குமாறும் அனைத்து பிரதேச மாவட்ட செயலகங்களுக்கும் அறிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, சகல பிரதேசங்களிலும் பாடசாலைகளில் தர்ம போதனை உள்ளிட்ட மத வழிபாடுகள் நடத்துவதற்கு இன்று சுற்றறிக்கை மூலம் அறிவித்தல் வழங்கவுள்ளதாகவும் கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார். மகாநாயக்க தேரர்களின் ஆலோசனைக்கமைய ஜூன் 14 ஆம் திகதி அலரி மாளிகையில் பாடசாலை மாணவர்கள் கலந்துகொள்ளும் ‘சில்’ சமய நிகழ்வுகள் நடைபெறவுள்ளது.

அத்துடன் தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் ஏற்பாட்டில் மஹரகமவில் பொசன் வளையமொன்றை நடத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கல்வியமைச்சர் மேலும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

 

Thu, 06/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை