வீடமைப்பு நிர்மாண துறை அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் 50 வீடுகள்

மலையக சமூகத்தின் 190 வருட லயன் வாழ்க்கை முறையை முடிவுக்கு கொண்டுவரும் நோக்காக கொண்டு வீடமைப்பு மற்றும் நிர்மாண துறை அமைச்சின் நிதியிலிருந்து இரண்டரை கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளோம். இதன்மூலம் 50 வீடுகளை கட்டுவதற்கு எதிர்பார்கின்றோம் என ஐக்கிய தேசிய கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் கே.கே.பியதாச தெரிவித்தார்.

மஸ்கெலியா அப்புகஸ்தனை தோட்டத்தில் கிருஸ்ணபுரம் எனும் பெயரில் 25 தனி வீடுகளும், ராமர்புரம் எனும் பெயரில் 25 தனி வீடுகளுக்கான அடிக்கல் நாட்டுவிழா அண்மையில் நடைபெற்றது. அதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன் போது கருத்து அவர்,

தற்போது ஐக்கிய தேசிய கட்சி சார்பாக மலைநாட்டிற்கு அமைச்சர் பழனி திகாம்பரம் இருக்கிறார். இவர் கடந்த 4 வருடங்களில் கணிசமான வீடுகளை அமைத்து கொடுத்துள்ளார். அதுமட்டுமன்றி வீடமைப்பு மற்றும் நிர்மாண துறை அமைச்சராக சஜித் பிரேமதாச உள்ளார்.

தற்போது வீடமைப்பு மற்றும் நிர்மாணதுறை அமைச்சு மலையகத்திற்கு சேவை புரிய முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. வீடமைப்பு மற்றும் நிர்மாண துறை அமைச்சின் நிதியிலிருந்து இரண்டரைக் கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளோம். இதன்மூலம் 50 வீடுகளை கட்டுவதற்கு எதிர்பார்கின்றோம்.

இந்த வீடுகளை ஏழரை பேர்ச் காணியில் தனிவீட்டுகளாக அமைக்கவுள்ளோம். தமது உழைப்பை கொண்டு தரமான வீடுகளை அமைத்து கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் முன்னாள் பிரதேச சபை முதல்வர் ரவிச்சந்திரன்,தொழில் உறவு அதிகாரி நாதன், பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் அருனசாந்த, தேசிய வீடமைப்பு அதிகார சபை உயர் அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மஸ்கெலியா அப்புகஸ்தனை தோட்டம்

Tue, 06/11/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை