ஸஹ்ரானின் மடி கணனி கண்டுபிடிப்பு; சகா பதுக்கிய ரூ 35 இலட்சம் மீட்பு

ஒருவர் கைது; ஆற்றுக்குள் வீசிய மடி கணனியும் கண்டெடுப்பு

தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்புடன் தொடர்புள்ள ஒருவரின் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலையடுத்து அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, அம்பாறை மாவட்டத்தின் பாலமுனை ஹுசைனியா நகர்ப் பிரதேசத்திலுள்ள வீடொன்றிலிருந்து பெருந் தொகைப் பணமும் நகைகளும் கைப்பற்றப்பட்டன.

சுமார் 35 இலட்சம் ரூபா பணமும் ஒரு தொகை நகைகளும் கைப்பற்றப்பட்டதுடன், அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டாளைச்சேனை பிரதேச ஆற்றங்கரைப் பகுதியில் வீசப்பட்டிருந்த மடி கணனியொன்றும் கண்டெடுக்கப்பட்டது.

புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து, அம்பாறை புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்களும் அம்பாறை பொலிஸ் உத்தியோகத்தர்களும் இணைந்து நேற்று(31) மேற்கொண்ட சுற்றி வளைப்புத் தேடுதலைத் தொடர்ந்தே இவை கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தேசிய தௌஹீத் ஜமாஅத்துடன் தொடர்புபட்ட அம்பாறை மாவட்ட பிரதான செயற்பாட்டாளர் என கடந்த மே மாதம் 22 ஆம் திகதி கல்முனை சியாம் என்றழைக்கப்படும் சாஹுல் ஹமீத் ஹமீஸ் மொஹமட் கல்முனைப் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டார். இவர் அபூ ஹசன் என்றும் அழைக்கப்படுவார். அரச புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலையடுத்து கல்முனை பொலிஸார் மற்றும் அம்பாறை பிரிவு பொலிஸார் இவரை கைது செய்திருந்தனர்.

இரு வேறு சந்தர்ப்பங்களில் இவரிடமிருந்து பெறப்பட்ட தகவலுக்கமைய 5 இலட்சம் ரூபாவும் மற்றொரு சந்தர்ப்பத்தில் 10 இலட்சம் ரூபாவும் கைப்பற்றப்பட்டது.

பயங்கரவாதி ஸஹ்ரானின் கல்முனை இணைப்பாளராக செயற்பட்டதாக கூறப்படும் இவர் சாய்ந்தமருதிலும் அட்டாளைச்சேனையிலும் நிந்தவூரிலும் சம்மாந்துறை சென்னல் கிராமத்திலும் 4 வீடுகளை பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பு வீடுகளாக வாடகைக்கு பெற்றுக் கொடுத்தவர் இவர் என்றும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. அட்டாளைச்சேனை வீட்டிலிருந்து பென் டிரைவ் ஒன்றும் ஹார்ட் டிஸ்க் ஒன்றும் கைப்பற்றப்பட்டிருந்தது.

சாய்ந்தமருது வீட்டிலேயே பயங்கரவாதிகள் தற்கொலை குண்டை வெடிக்கவைத்துக்ெகாண்டனர்.

கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ள சாஹுல் ஹமீத் ஹமீஸ் மொஹமட் வழங்கிய தகவலையடுத்து அவரது உறவினரின் வீட்டிலிருந்தே இப்பணமும் நகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. வீட்டின் உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த வாரம் கைது செய்யப்பட்ட தேசிய தௌஹீத் ஜமாஅத்துடன் தொடர்புபட்டவர் என்றும் ஸஹ்ரானின் இணைப்பாளர் எனக் கூறப்படும் சாஹுல் ஹமீத் ஹமீஸ் மொஹமட் எனும் நபர் பொலிஸாரால் கைது செய்யப்படுவதற்கு முன்னர் பாலமுனை ஹுசைனியா நகர்ப் பிரதேசத்தில் வசித்து வரும் தமது உறவினரிடம் வைத்திருக்குமாறு இப் பெருந்தொகை பணத்தையும் நகைகளையும் கையளித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந் நபர் தமது உறவினரிடம் மடி கணணியொன்றையும் வைத்திருக்குமாறு வழங்கியபோதிலும் அதனை ஏற்க அவரது உறவினர் மறுப்புத் தெரிவித்ததையடுத்து அதனை அவர் எடுத்துச் சென்று அட்டாளைச்சேனை பிரதேச ஆற்றங்கரையையண்டிய பகுதியில் வீசியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு வீசப்பட்ட மடி கணணி நீரில் மூழ்கியிருந்த நிலையில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் அரச புலனாய்வுப் பிரிவினரும் பொலிஸாரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அட்டாளைச்சேனை தினகரன், அக்கரைப்பற்று மேற்கு தினகரன் நிருபர்கள்

 

 

 

Sat, 06/01/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை