பாடசாலை சுமுக நிலையை சீர்குலைத்தால் நடவடிக்ைக

பாடசாலைகளின் பாதுகாப்புக்கு உத்தரவாதம்

பாடசாலைகளுக்குள் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் சுமுக நிலையை சீர்குலைக்க முனைவோர் மீது விசாரணைகள் ஆரம்பிக்கப்படுமென கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் நேற்று தினகரனுககுத் தெரிவித்தார்.

"கொழும்பிலுள்ள சில பாடசாலை அதிபர்களும் ஆசிரியர்களும் மாணவர்களைப் பாடசாலைக்கு வருகை தர வேண்டாமென்றும் மாணவர்களின் பாதுகாப்பைத் தங்களால் உறுதி செய்ய முடியாதென்றும் பெற்றோரிடமும் மாணவர்களிடமும் கூறி வருவதாக எனக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இம்முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை நடத்தும் பொறுப்பை சிஐடி யினரிடம் ஒப்படைக்கவுள்ளேன். இதேவேளை கல்வி அமைச்சும் பிறிதாக விசாரணைகளை முன்னெடுக்கும்", என்றும் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.

"மேற்படி பாடசாலை

அதிபர்களும் ஆசிரியர்களும் அரசியல்வாதிகளின் நிகழ்ச்சி நிரலுக்கமைய செயற்படுகின்றார்கள் என்று நினைக்கின்றேன். மாணவர்களை பாடசாலைக்கு வரவேண்டாமெனக் கூறுவதிலிருந்து அவர்கள் ஏதோ சதியுடன் செயற்படுவதாகவே நினைக்கத் தோன்றுகின்றது. எனவே, அவ்வாறு கூறும் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது சிஐடி விசாரணை ஆரம்பிக்கப்படும்," என்றும் அமைச்சர் கூறினார்.

அனைத்து பாடசாலைகளுக்குள்ளும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு மேலும் பாடசாலைகளை மூடி வைப்பதில் அர்த்தம் இல்லை என்பதனால் இரண்டாம் தவணைக்குரிய கல்விச் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லுமாறு நான் அனைத்து பாடசாலைகளுக்கும் பணித்துள்ளேன் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

கொழும்பிலேயே மாணவர்களின் வரவு குறைவாக உள்ளது. வெளிமாவட்டங்களில் மாணவர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்றது. வடக்கில் மாணவர்களின் வரவு 70 சதவீதத்தால் உயர்வடைந்துள்ளது. பாடசாலைக்குள் பாதுகாப்பு உள்ளது என்பதனை நாம் பெற்றோரிடம் வலியுறுத்திக் கூற விரும்புகின்றேன். அத்துடன் மாணவர்களின் வருகை அதிகரிக்குமென்ற நம்பிக்கை இருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

லக்ஷ்மி பரசுராமன்

 

Thu, 05/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை