புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை நிறைவேற்ற சுதந்திர கட்சி அனுமதிக்காது

அமெரிக்காவுக்கும், பிரிட்டனுக்கும் அடிபணிந்து நாட்டைக் காட்டிக்கொடுக்க தயாரில்லை

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை ஒருபோதும் பாராளுமன்றத்தில் நிறைவேற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அனுமதியளிக்காது.

அமெரிக்காவுக்கும், பிரிட்டனுக்கும் அடிபணிந்து நாட்டை காட்டிக்கொடுக்க மாட்டோம் என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் இங்கு சுட்டிக்காட்டியுள்ளதாவது,

புதிய பயங்கரவாத ஒழிப்புச் சட்டத்தை விரைவாக நிறைவேற்றிக்கொள்ளும் தேவை சுதந்திரக் கட்சிக்கு இல்லை.

ஐ.தே.கவுக்கும் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவுக்கும்தான் குறித்த சட்டத்தை விரைவாக நிறைவேற்றிக்கொள்ளும் தேவையுள்ளது.

மக்களுக்கும் இந்தச் சட்டத்தில் எவ்வித நன்மையும் இல்லை. தற்போதைய சட்டத்தில் ஏதும் குறைபாடுகள் இருந்தால் அதனை மறுசீரமைத்துக் கொள்வதுதான் அவசியமாகும். அதற்கு ஆதரவளிக்கத் தயாரகவுள்ளோம். ஆனால் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். பொறுப்புள்ள கட்சி என்ற ரீதியில் நாட்டு மக்களின் எண்ணங்களின் பக்கமே நாம் நிற்போம். மக்களின் நலனை மாத்திரம் முதன்மையாகக் கொண்டே எந்தவொரு தீர்மானத்தையும் எடுப்போம். ஐரோப்பிய நாடுகளின் சட்டங்கள் எமது நாட்டுக்கு அவசியமல்ல. ஆகவே, அமெரிக்காவும், பிரிட்டனுக்கும் அடிபணிந்து நாட்டை காட்டிக்கொடுக்க நாங்கள் தயாராக இல்லை என்றார்.

 

Tue, 05/21/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை