பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியம்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்கமைய சப்ரகமுவ, மத்திய, தென், மேல், மற்றும் வடமேல் மாகாணங்களின்; சில இடங்களில் 100 -150 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ஊவா மாகாணத்திலும் மன்னார் மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களின் சில இடங்களில் 75 -100 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகலாம் என்று  எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.

அத்தோடு, நாடு முழுவதும் குறிப்பாக மத்திய மலைநாடு, வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மணித்தியாலத்துக்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

மேற்கு - மத்திய மற்றும் தென்மேற்கு வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு வடகிழக்காக விருத்தியடைந்த மிகவும் கடுமையான சூறாவளியான போனி, (FANI)  நேற்று (30) முற்பகல் 11.30மணிக்கு வட அகலாங்கு 13.5N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 84.4E இற்கும் அருகில்,  திருகோணமலையிலிருந்து வடகிழக்காக ஏறத்தாழ 650 கிலோமீற்றர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது. இது கடுமையான சூறாவளியாக மாறக்கூடிய சாத்தியம் காணப்படுவதோடு, வடக்கு - வடகிழக்கு திசையில் நகரக்கூடிய சாத்தியமும் காணப்படுவதாகவும், வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.

ஆகையால், பொதுமக்களும் கடலில் பயணிப்போரும்  மீனவ சமூகத்தினரும் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

Wed, 05/01/2019 - 11:12


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை