இத்தாலி பகிரங்க டென்னிஸ்; ஆடவரில் நடால், மகளிரில் பிளிஸ்கோவா ‘சம்பியன்’

இத்தாலி பகிரங்க டென்னிஸ் போட்டியில் ஆண்கள் பிரிவில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ரபெல் நடாலும், பெண்கள் பிரிவில் கரோலினா பிளிஸ்கோவா சம்பியன் பட்டம் பெற்றனர்.

பிரெஞ்ச் பகிரங்த்துக்கு முன்னோட்டமாக இத்தாலி பகிரங்க சர்வதேச டென்னிஸ் போட்டி ரோம் நகரில் நடந்தது. களிமண் தரை போட்டியான இதில் ஆண்கள் பிரிவில் நேற்றுமுன்தினம் நடந்த இறுதி ஆட்டத்தில் முதனிலை வீரர் நோவக் ஜோகோவிச்சும் (செர்பியா), 2-ம் நிலை வீரர் ரபெல் நடாலும் (ஸ்பெயின்) பலப்பரீட்சை நடத்தினர். விறுவிறுப்பான இந்த மோதலில் நடால் 6-0, 4-6, 6-1 என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தி 9-வது முறையாக இந்த பட்டத்தை வசப்படுத்தினார். இந்த ஆட்டம் 2 மணி 25 நிமிடங்கள் நீடித்தது.

ஆயிரம் தரவரிசை புள்ளிகளை வழங்கும் இத்தகைய மாஸ்டர்ஸ் பட்டத்தை நடால் வெல்வது இது 34-வது முறையாகும். வெற்றி பெற்ற நடாலுக்கு ரூ.18 கோடியும், 2-வது இடம் பிடித்த ஜோகோவிச்சுக்கு ரூ.9 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.

பெண்கள் பிரிவில் நடந்த இறுதி ஆட்டத்தில் கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு) 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் ஜோஹன்னா கோன்டாவை (இங்கிலாந்து) தோற்கடித்து வாகை சூடினார். 1978-ம் ஆண்டுக்கு பிறகு செக்குடியரசு வீராங்கனை ஒருவர் இந்த பட்டத்தை பெறுவது இதுவே முதல் முறையாகும். மொத்தத்தில் பிளிஸ்கோவா கைப்பற்றிய 13-வது சர்வதேச பட்டமாக இது அமைந்தது.

Tue, 05/21/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை