வெசாக் : 762 கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு

வெசாக் பண்டிகையை முன்னிட்டு சிறைக்கைதிகள் 762 பேர் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இவர்களில் 34 கைதிகள் அன்றைய நாளுக்கான அனுமதிப்பத்திரம் மூலம் விடுதலை செய்யப்படவுள்ளனர். இதில் 26 பேர் பெண்கள் ஆவர்.

சிறைக்கைதிகளை விடுதலை செய்யும் நிகழ்வு எதிர்வரும் 18 ஆம் திகதி இடம்பெறவுள்ளதோடு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் வெலிக்கடை சிறைச்சாலையில் இதற்கான நிகழ்வு இடம்பெறும்

வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து 117 பேரும், அநுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து 50 பேரும்,  பல்லன்சேன இளைஞர் புனருத்தாபன மத்திய நிலையத்திலிருந்து 53 பேரும் களுத்துறை சிறைச்சாலையிலிருந்து 45 பேரும்மஹர சிறைச்சாலையிலிருந்து  55 பேரும் பல்லேகலே சிறைச்சாலையிலிருந்து 62 பேரும் விடுதலை செய்யப்படவுள்ளனர்.

சிறு குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டோர்,  அபராதம் செலுத்த முடியாதோர், 70 வயதிற்கு மேற்பட்டோர் இதன்போது விடுதலை செய்யப்படவுள்ளனர்.

கற்பழிப்பு, போதைப்பொருள் குற்றச்சாட்டு, சிறுவர் துஷ்பிரயோகம், கொள்ளை உள்ளிட்ட பாரிய குற்றச்சாட்டுகள் தொடர்பில் குற்றவாளிகளாக சிறையில் வைக்கப்பட்டோருக்கு ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிகழ்வில் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள உள்ளிட்டோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

Thu, 05/16/2019 - 16:16


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை